Tamilnadu

சுதந்திர போராட்ட வீரர், தகைசால் தமிழர் என்.சங்கரய்யா காலமானார் : அவர் குறித்த சிறு தொகுப்பு !

மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட என்.சங்கரய்யாவுக்கு இப்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 102.

அவர் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு :

1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர். அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோது, மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டம் பெரும் உத்வேகம் தந்தது. சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்த சங்கரய்யா, 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டியவர்.

அதன் பின்னர் 1941-ல் போராட்டக் கனல் மதுரையையும் பற்றியது. பி.ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட சங்கரய்யா கைதானார். படிப்பு பாதியில் நின்றது. வழக்கறிஞராக்க வேண்டும் என்ற அவரது தந்தையின் கனவும் பாதியில் நின்றது. பின்னர் தொடர்ச்சியன போராட்டத்தில் பங்கேற்றார் சங்கரய்யா. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது நெல்லையில் மாணவர்களைத் திரட்டி பேரணி நடத்தினார். பேரணியில் தடியடியில் காயமடைந்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்ட சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னர் 1943-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றார். கலை, இலக்கியத்தில் மிக அதிக ஆர்வம் கொண்ட சங்கரய்யாதான் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அமைக்க காரணமானவர். பொதுக்கூட்டங்களில் கட்சி கொள்கைகளை பாடல்களாக பாடவைத்து மக்களை திரட்டுவார்.

1947ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தோழர் பொன்னுச்சாமியின் மகள் நவமணியைத் திருமணம் செய்துகொண்டார். நவமணி கிறிஸ்தவர் என்பதால், சங்கரய்யா குடும்பத்தில் சிலர் எதிர்த்தாலும் உறுதியாக நின்றார்.தனது வாழ்நாள் முழுவதும் போராட்டங்களைச் சந்தித்த அவர், இளைஞர்களுக்கு சொல்லும் முதல் அறிவுரை சாதி மறுப்பு திருமணம் செய்யுங்கள் என்பதுதான். தன்னுடைய அரசியல் வாழ்க்கையில், குடும்பத்தினர் அனைவருக்கும் நுற்றுக்கணக்கான சீர்திருத்த சாதி மறுப்புப் திருமணங்களை முன் நின்று நடத்தி வைத்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால் 1948-51 வரை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அவர் இந்தியா முழுவதும் பல இடங்களில் தலைமறைவாக வாழ்ந்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றாக இருந்போது ‘ஜனசக்தி’ நாளேட்டின் பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். கட்சி பிரிந்த பிறகு மார்க்சிஸ்ட் கட்சி நாளிதழான ‘தீக்கதிர்’-ல் ஆசிரியராக பணியாற்றினார்.

கட்சி பத்திரிகையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அரும்பாடுபட்டவர். பின்னர் 1957 தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதி முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதையடுத்து 1967-ல் மதுரை மேற்குத் தொகுதியில் முதன்முறையாக வெற்றிபெற்றார். அதையடுத்து 1977, 1980 தேர்தல்களிலும் வெற்றிபெற்றார்.

1997-ல் அப்போதைய முதல்வராக இருந்த தி.மு.க தலைவர் கலைஞர் தலைமையில் மதுரையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீவிர நிலச் சீர்திருத்தமே தீர்வு என்று முழங்கினார். அதைச் செய்ய கோரிக்கையும் விடுத்தார். அவர் குரல் எப்போதும் கம்பீரத்துடன் தான் இருக்கும்.

அவருக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று உண்டு. அதை எப்போது கேட்டாலும் அவர் கலங்கிவிடுவார். அதுபற்றி ஒருமுறை அவரே கூறியுள்ளார். அப்போது அவர் பேசும் போது, “மதுரையில் நடைபெற்ற கலை இரவு பொதுக்கூட்டத்தில் ‘விடுதலை போரில் வீழ்ந்த மலரே’ என்ற பாடல் அவரது நெஞ்சுக்கு நெருக்கமானது. இன்னும் அந்த பாடலை இங்கு கேட்டாலும் அந்த பாடல் முடியும் வரை அங்கு இருந்து செல்லமாட்டேன் என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார். இவருக்கு தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்துள்ளது.

Also Read: "அதிகாரங்களை ஆளுநர்கள் கையில் எடுக்க முடியாது" - உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து : முரசொலி தலையங்கம் !