முரசொலி தலையங்கம்

"அதிகாரங்களை ஆளுநர்கள் கையில் எடுக்க முடியாது" - உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து : முரசொலி தலையங்கம் !

"அதிகாரங்களை ஆளுநர்கள் கையில் எடுக்க முடியாது" - உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து :  முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (15.11.2023)

ஆளுநர்கள் தலையில் இடி - 2

தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, முகுல் ரோத்தகி, பி. வில்சன் ஆகியோர் வலிமையான வாதங்களை எடுத்து வைத்தார்கள். ''கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் சாசன நெறிமுறைகளுக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார்கள். இது ஆளுநர்களுக்கு பிடித்த நோய் போல உள்ளது. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இதே வகையான பிரச்சினைகளுடன் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்கள் மற்றும் அரசின் தீர்மானங்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவதால் அரசுப் பணிகள் முடங்குகிறது. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம் தொடர்பான கோப்புகள் கூட ஆளுநரிடம் முடங்கிக் கிடக்கிறது. ஆணையத் தலைவர் உள்ளிட்ட 14 உறுப்பினர் பதவிகளில் 10 பணியிடங்களை நிரப்ப முடியவில்லை . டி.என்.பி.எஸ்.சி.தலைவர் உள்ளிட்ட அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முழு அதிகாரம் இல்லாமல் அரசு ஆட் சேர்ப்பு செய்ய முடியாது" என்ற வாதங்களை அரசு சார்பில் வழக்கறிஞர்கள் வைத்தார்கள்.

''மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை . அரசியலமைப்பின் பிரிவு 200, மசோதாக்களை 'கூடிய விரைவில்' கையாள வேண்டும் என்று கோருகிறது . ஆனால், As soon as possible என்ற வாக்கியத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தவறாக புரிந்து கொண்டு தவறாக செயல்படு கிறார் . அரசியல் சாசன பிரிவுகள் 200 மற்றும் 163- இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் சாசனத்திற்கு எதிராகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படுவதால் அவர் செயல் இழந்துவிட்டார்" என தமிழ்நாடு அரசின் சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டது.

மசோதாக்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளைக் கையாளும் போது உச்சநீதிமன்றத்தால் ஆளுநர்களுக்கு நிர்ணயிக்கப்பட வேண்டிய காலக்கெடு குறித்து பரிசீலிக்கக்கூடிய 5 சட்ட முன்மொழிவுகளை தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வழங்கினார். அரசியலமைப்பின் 91வது பிரிவின் கீழ் குடியரசுத்தலைவருக்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு 6 வாரங்கள் என்றும் அது ஆளுநர்களுக்கும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டது.இந்த வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்,மிகக்கடுமையாக ஆளுநரை விமர்சித்துள்ளார்கள்.

"அதிகாரங்களை ஆளுநர்கள் கையில் எடுக்க முடியாது" - உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து :  முரசொலி தலையங்கம் !

''அரசியல் சாசனம் 200வது பிரிவின் கீழ், சட்டப் பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட உடன், உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஆளுநரின் செயல்பாடுகள் தாமதமாகி, மசோதாக்கள் கிடப்பில் உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட முடியாது . அரசியலமைப்புச் சட்டப்படி மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். இதைத்தான் செய்ய வேண்டும். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு மிகவும் கவலையளிக்கிறது" என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும், ஒன்றிய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆஜராகவும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

தமிழ்நாடு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் ரவி எப்படி குட்டுப்பட்டாரோ அதே போல, பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் அந்த மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குட்டுப்பட்டுள்ளார்.

''சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்படும் மசோதாக்களை கிடப்பில் போடும் ஆளுநர்களின் செயல் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. மசோதாக்களை எத்தனை நாட்களுக்குத்தான் ஆளுநர் இப்படி கிடப்பில் போட்டிருப்பார்? ஆளுநர் தீயுடன் விளையாடுகிறார். சட்டமன்றம் கூட்டப்பட்ட முறை சரியல்ல என்று கூறி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று ஆளுநர் எப்படி கூறமுடியும்? மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றத்தின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று எப்படி கூறமுடியும்? இது மிகவும் கவலை அளிக்கும் விவகாரம். நாம் நாடாளுமன்ற ஜனநாயகத்தைத்தான் தொடர்கிறோமா? சபாநாயகர் சட்டமன்றத்தை கூட்டியது தவறு என்று எப்படி சொல்ல முடியும்? எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ஆளுநர் அப்படி கூறினார்? சட்டமன்றம் கூட்டப்பட்டது சரியல்ல என்று கூறி 4 மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்க முடியாது; - இதுபோன்ற அதிகாரங்களை ஆளுநர்கள் கையில் எடுக்க முடியாது; - இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. ஆளுநர்களுக்கு சில அதிகாரங்கள் உள்ளன - அதற்காக மசோதாக்களை கிடப்பில் போட முடியாது" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நெத்தியடி அடித்துள்ளார்கள்.

''மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் உள்ளது - மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குபவராக ஆளுநர் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் அரசியல் சாசனம் இயற்றப் பட்டுள்ளது. ஆளுநருக்கான அதிகாரம் என்ன என்பதை முந்தைய தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன" என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பிரெஞ்சு தேசத்தில் பதினான்காம் லூயி நினைத்ததைப் போல, ' I AM THE STATE' என்று நினைத்துக் கொள்ளும் ஆளுநர் ரவி உள்ளிட்ட அதிகப்பிரசங்கிகளுக்கு தலையில் இடியாய் இறங்கி இருக்கிறது உச்சநீதிமன்றம்.

banner

Related Stories

Related Stories