Tamilnadu

மகளிர் உரிமைத்தொகை: பெண்கள் குறித்து அவதூறு பரப்பிய சவுக்கு அட்மின் கைது - சவுக்கு சங்கருக்கும் சிக்கல்?

தமிழ்நாடு பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் அறிவிக்கப்பட்டது தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பரப்பியதாக வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் டிவிட்டர் கணக்கின் அட்மினை சைபர் கிரைம் போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 20 ஆம் தேதி நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது தி.மு.க. தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில், வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்கிற ட்விட்டர் பக்கத்தில் செந்தில், கவுண்டமணி நடித்த நகைச்சுவை காட்சி ஒன்றை ஒப்பிட்டு வெளியிட்டார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், தமிழக அரசின் மீது அவதூறு பரப்பும் வகையிலும் இந்த வீடியோ அமைந்திருப்பதாக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் இந்த வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் டிவிட்டர் கணக்கு பக்கத்தின் அட்மின் பிரதீப் மீது, பெண்களை அவமானபடுத்துதல், கலகத்தை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இந்த நிலையில் ட்விட்டர் கணக்கு நடத்தி வரும் பிரதீப் என்பவரை நேற்று இரவு கும்மிடிப்பூண்டி அருகே வைத்து சைபர் கிரைம் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: வாடகைக்கு வீடு எடுத்து போதைப்பொருள் விற்பனை.. சின்னத்திரை நடிகையை கைது செய்த கேரளா போலிஸ்!