Tamilnadu

மகளிர் காவலர்கள் பொன்விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 9 வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகள் என்ன?

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்புத் தபால் உறையினை வெளியிட்டு, 'அவள்' திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மேலும் மிதிவண்டித் தொடர் பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் காவலர்களுக்கான 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த 9 வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகள் வருமாறு:-

1. பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான காவல் பணியையும் செய்து வருவதால், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ‘ரோல்-கால்’எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு,இனிமேல் காலை ஏழு மணி என்பதற்கு பதிலாக, எட்டு மணி என மாற்றியமைக்கப்படும்.

2. சென்னை மற்றும் மதுரை ஆகிய இருபெருநகரங்களிலும் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும்.

3. அனைத்துக் காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கென கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும்.

4. பெண் காவலர்கள், காவல் நிலையங்களில்பணிக்கு வரும்போது, தங்களது குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வரக்கூடிய சூழலை உணர்ந்து, சில மாவட்டங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டது. அதை முழு அளவில் மேம்படுத்திச்செயல்படுத்தும் விதமாக, விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும், காவல் குழந்தைகள் காப்பகம்" அமைக்கப்படும்.

5. பெண் காவல் ஆளினர்களின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் விதமாக. பெண்களை முதன்முறையாக காவல் பணியில் ஈடுபடுத்திய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களது நினைவாக,அவரது பெயரில் “கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும்" ஆண்டுதோறும் வழங்கப்படும்.

6. ஆண் காவலர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெறும் இன்றைய சூழ்நிலையில், பெண் காவலர்கள், ஒரு காவலர் என்பதையும்தாண்டி - அவர்கள் தாயாகவும், மனைவியாகவும், குடும்பத்தைப் பாதுகாத்து வரும் பொறுப்புகளை சுமப்பவர்களாகவும் இருப்பதால், அவர்களது குடும்பச் சூழலுக்கு ஏற்ப, விடுப்பு, பணியிட மாறுதல்வழங்குமாறு, காவல் உயர் அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படும்.

7. பெண் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும்போட்டி தனியாக ஆண்டுதோறும்நடத்தப்பட்டு, விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். அதேபோல், தேசிய பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கிச்சுடுதல் போட்டி தமிழ்நாட்டில் நடத்திடஏற்பாடு செய்யப்படும்.

8. பெண் காவல் ஆளினர்களின் தேவைகள், பிரச்சினைகள், செயல்திறன் பற்றி கலந்தாலோசனை செய்யும் விதமாக,"காவல்துறையில் பெண்கள்" எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும்.

9. பெண் காவல் ஆளிநர்கள் தங்கள் பணி முறையை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளும் விதமாகவும், குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் விதமாகவும், டி.ஜி.பி. அலுவலகத்தில் "பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு" (Career Counselling) ஒன்று அமைக்கப்படும்.

- ஆகிய அறிவிப்புகள் உங்கள் அனைவர்க்கும் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என நினைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களின் மருத்துவக் கல்வித் தடையை உடைப்பார் அனிதா! -முரசொலி உறுதி !