Tamilnadu

Chess Olympiad Update : முதல் நாளிலே இந்திய அணி அபாரம் ! - வெற்றி கணக்கை துவக்கிய சிறுவன்..

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் சென்னை மாமல்லபுரத்தில், நேற்று (ஜூலை 28) தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த போட்டி தொடரில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறுகின்றனர்.

இந்த போட்டி இன்று பகல் 3 மணியளவில் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியானது பல்வேறு நாடுகளும் மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று தொடங்கப்பட்ட இந்த போட்டித்தொடரில் இந்திய அணியின் A பிரிவு ஜிம்பாப்வே அணியுடன் பலப்பரீட்சை காண்கிறது. மேலும் இந்திய அணியின் B பிரிவு ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது. அதோடு இந்திய அணியின் C பிரிவு சூடானை எதிர்கொள்கிறது. இதில் ஓபன் பிரிவில் இந்திய B அணியில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதிய இந்திய அணி தற்போது வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற முதல் சுற்றில் ஐக்கிய அரபு அமீரக அணி சார்பாக ஆடிய வீரர் அப்துல் ரகுமானை, இந்திய அணி சார்பாக ஆடிய வீரர் ரோனக் சத்வானி வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். வெள்ளை நிறக்காய்களுடன் களமிறங்கிய சத்வானி, தனது 36-வது நகர்த்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்திய அணி சார்பாக ஆடி முதல் வெற்றியை பெற்று தந்த மகாராஷ்டிராவை சேர்ந்த ரோனக் சத்வானி, தனது 13-வது வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் செஸ் வரலாற்றில் 9-வது இளம் வீரர் என்றும், இந்திய அளவில் 4-வது இளம் வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். தற்போது இவருக்கு 16 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து.. இரத்தம் வழிய மருத்துவமனைக்கு கொண்டு போன 'கோமாளி' பட நடிகை..