Tamilnadu

ஜல்லிக்கட்டு முன்பதிவு நிறைவு.. 4,534 காளைகள், 1,999 மாடுபிடி வீரர்கள்... குவிந்த விண்ணப்பங்கள்!

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு முன்பதிவு நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

கொரனோ பரவல் காரணமாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டன, நேற்று மாலை 5.30 மணி முதல் துவங்கிய முன்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கலந்து கொள்வதற்காக 4,534 காளைகளுக்கும், 1,999 மாடுபிடி வீரர்களும் என மொத்தம் 6,533 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஒவ்வொரு போட்டிகளிலும் சுமார் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ள நிலையில் 2 மடங்கு அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர்.

காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முறையாக போன் செய்தோ அல்லது குறுந்தகவல் மூலமாகவோ தகவல் தெரிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்பதிவில் தேர்வு செய்யப்பட்டாலும் போட்டி நடைபெறும் தினத்தன்று காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெறும் நிலையில் அதில் தேர்வு செய்யப்படும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பேருந்தில் 75% இருக்கைகளுடன் மட்டுமே பயணிக்க அனுமதி” : ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழு விவரம் இங்கே..!