Tamilnadu

ரயில் நிலைய கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. ரயில்வே ஊழியரே பணத்தை திருடியது அம்பலம்!

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று காலை டிக்கெட் எடுப்பதற்கானக் கவுண்டர் மூடப்பட்டிருந்ததைப் பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், டிக்கெட் கவுண்டர் உள்ளே பயணிகள் சென்று பார்த்தபோது ரயில்வே ஊழியரின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்த பார்த்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பிறகு, அங்கு வந்த போலிஸார் ஊழியை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மூன்று பேர் டிக்கெட் எடுப்பதுபோல் வந்து, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தன்னை கட்டிப்போட்டு விட்டு கவுண்டரில் இருந்து ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறினார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து 2 தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்னர் ரயில்நிலையம் அருகே இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் வந்து சென்றதற்கான அடையாளம் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் பெண் ஒருவர் மட்டுமே வந்து சென்றது சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அவர் யார் என்று நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் கட்டிப்போட்ட ரயில்வே ஊழியர் டீக்காராம் மீனாவின் மனைவி என்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலிஸார் மீண்டும் ரயில்வே ஊழியரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் ரயில்வே ஊழியரும், அவரது மனைவியும் கொள்ளையடித்து விட்டு பணத்தை மர்ம கும்பல் திருடிச் சென்றுவிட்டதாக நாடகமாடியது அம்பலமானது. மேலும் டீக்காராம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.

இதனால் ரயில் நிலைய கவுண்டர் பணத்தை கொள்ளையடிக்க மனைவியுடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார். இதன்படி நேற்று காலை மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து போலிஸார் ரயில்வே ஊழியர் டீக்காராம், அவரது மனைவியை கைது செய்தனர். பிறகு அவரிகளிடம் இருந்து ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Also Read: Google Pay மூலம் தனியார் மருத்துவமனை பணத்தை திருடிய கும்பல்.. வட மாநில கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?