Tamilnadu

மாட்டை தேடிச் சென்ற தம்பதி பலியான சோகம்... வெளிவந்த அதிர்ச்சி காரணம் - இளைஞர் கைது!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பன்றியை வேட்டையாட, சட்டத்துக்குப் புறம்பாக அமைத்த மின்வேலியில் தம்பதியர் மற்றும் பசுமாடு சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அஸ்வினி (26). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கணவந்மனைவி இருவரும் நேற்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற பசு மாட்டைத் தேடிக்கொண்டு தங்களது நிலத்துக்குச் சென்றனர். இரவு நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால், உறவினர்கள் சிலர் இருவரையும் இன்று காலை தேடிச் சென்றனர். அப்போது, விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான எலுமிச்சை தோட்டத்தில், கணவன் - மனைவி இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்ததைப் பார்த்துள்ளனர். அவர்களது உடல்களுக்கு அருகே, பசுவும் இறந்து கிடந்தது.

இதுகுறித்து உறவினர்கள் திருவலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறையினர் வந்து இருவரின் உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கணவன் மனைவி இருவரும் பன்றியை வேட்டையாட அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மின்வேலி அமைத்த நிலத்தின் உரிமையாளரான விஜயகுமாரிடம் விசாரித்தனர். அதில், அவர் நிலத்துக்கு வந்து ஒரு வாரம் ஆனதாகத் தெரிவித்துள்ளார். தொடர் விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (23) என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் பன்றியை வேட்டையாடுவதற்காக விஜயகுமாரின் நிலத்தின் வழியாகச் செல்லும் மின்கம்பத்தில் இருந்து கொக்கி மூலம் மின்சாரத்தைத் திருடி மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்தனர்.

பன்றி வேட்டைக்காக அமைக்கப்பட்ட மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “சிகரெட் தர்றியா.. இல்லையா” : இளம்பெண்ணை அடித்தே கொன்ற வாலிபர்.. டெல்லியில் ‘பகீர்' சம்பவம்!