Tamilnadu

“சில்லறை வியாபாரிகள் தற்கொலை செய்துகொள்வதா?” - அரசின் புதிய கட்டுப்பாடுகளால் கொந்தளிக்கும் சிறுவணிகர்கள்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் மக்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். அரசின் மெத்தனப்போக்கால் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக கோயம்பேடு சந்தையில் இயங்கி வரக்கூடிய சில்லறை விற்பனைக் கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டு காலமாக போதிய வருமானம் இன்றி கடும் நஷ்டத்துடன் சில்லறை வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை செய்து வரக்கூடிய நிலையில் வருகின்ற 10ஆம் தேதி முதல் சில்லறை வணிகத்திற்கு தடை விதித்திருப்பது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய ஒன்று என்றும் 8 ஆயிரம் கடைகளை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் அரசு செயல்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோயம்பேடு சந்தையில் பணியாற்றக்கூடிய அரசு அதிகாரிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு 500 மொத்த வியாபாரி கடைகளுக்கு அனுமதி அளித்து 8,000 சில்லறை வியாபார கடைகளுக்கு தடை விதித்துள்ளனர். தமிழக அரசு விதித்துள்ள சில்லரை வணிகத்திற்கான தடை அமலுக்கு வந்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் சூழல் நேரிடும் என்றும் சில்லறை வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், “500 கடைகளை மட்டுமே நம்பி மக்கள் கூட்டம் கூட்டமாக கூடினால் கொரோனா மிகவும் வேகமாக பரவும். அதை கட்டுப்படுத்த இயலாது. மொத்த கடைகளையும் திறந்து அரசு விதித்துள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே நோய்த்தொற்று பரவலை தடுக்க முடியும்.

அதேபோல் அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து வரக்கூடிய கண்காணிப்பாளர்கள் நோய்த் தொற்றின் விதிமுறைகளை நன்கு அறிந்தும் சட்டத்திருத்தங்கள் அறிந்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.” எனத் தெரிவிக்கின்றனர்.

Also Read: தமிழகத்தில் கொரோனா அலை தீவிரம் : ஏப்.,10 முதல் மினி லாக்டவுன்? - வெளியானது புதிய கட்டுப்பாடுகள்!