
இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.15) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திற்கு தலைவர் நியமனம் செய்யாதது ஏன்?
திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி.
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தற்போதைய தலைவர் நியமனத்தில் ஏற்படும் தாமதத்திற்கான காரணம் என்ன?
ஏப்ரல் 2025 முதல் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் கூட்டங்கள் நடைபெறாதது ஏன்? நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் கடைசி ஆண்டு அறிக்கையின் விவரங்கள் என்ன?

2014 முதல் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் ஆண்டு அறிக்கை மீதான நடவடிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை இப்போது நினைவூட்டுகிறேன்.
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான யுஜிசி வரைவு விதிமுறைகள் 2025ஐ திரும்ப பெறுக!
தஞ்சாவூர் முரசொலி எம்.பி.
துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில சுயாட்சியில் தலையிடும் யுஜிசியின் 2025 ஆம் ஆண்டுக்கான வரைவு விதிமுறைகளைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளாதது ஏன் என திமுக எம்.பி. முரசொலி கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் விதிமுறைகளை இறுதி செய்வதற்கு முன்பு மாநில அரசுகளுடன் முறையான கலந்தாலோசனைகள் நடத்தாதது ஏன்? என்றும் அவர் கேட்டுள்ளார்.






