
இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.15) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,
1. தமிழ்நாட்டில் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களின் நிலை என்ன?
ஆர். கிரிராஜன் எம்.பி.
20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகைக் கொண்ட ஆக்ரா (16 லட்சம், பாட்னா(17 லட்சம்) மற்றும் போபால் (18 லட்சம்) போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில் குறைந்த மக்கள் தொகையைக் காரணம்காட்டி, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரித்தது ஏன் என்றும் தமிழ்நாட்டிற்கு எதிராக ஒன்றிய அரசின் அலட்சியமான மற்றும் பாரபட்சமான முடிவிற்கான காரணங்கள் கேட்டும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆ. கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2. மாற்றுத் திறனாளிகளுக்கு விமானப் பயணத்தை இலகுவாக்க நடவடிக்கை என்ன?
எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முன்மொழிந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திருத்தப்பட்ட விதிமுறைகளின் வரைவு மிக கடுமையானதாக இருப்பதை குறித்து ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவுகள் என்ன என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். ஆர். சிவலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பயண முகவர்கள் அல்லது இணைய தளங்கள் வழியாக பதிவு செய்யும் பயணிகளுக்கு சரியான நேரத்தில் பணத்தைத் திரும்பப் பெறுதல், கட்டணமில்லா மாற்றங்களுக்கான கால அவகாசத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை உறுதிப்படுத்த அரசு முன்மொழியும் நடவடிக்கைகள் மற்றும் விமான நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் ஸ்ட்ரெச்சர் மற்றும் சக்கர நாற்காலியுடன் விமானத்தில் நுழைய பயன்படுத்தப்படும் ambulifts, இழுத்துச் செல்லக்கூடிய வளைவுப் பாதைகள், குறியீடுகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட சக்கர நாற்காலி வசதிகள் உள்ளடக்கிய பயண வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
3. பட்டியல் வகுப்பினர் மற்றும் பெண்களுக்கு வங்கிக் கடன்கள் முறையாக வழங்கப்படுகின்றனவா?
ராஜாத்தி சல்மா எம்.பி
கடந்த மூன்று ஆண்டுகளில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் மாநில வாரியாக அனுமதிக்கப்பட்ட வங்கிக் கடன்களின் மொத்தத் தொகை மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் பட்டியல் வகுப்பினர்/பழங்குடியினர் மற்றும் பெண்கள் எத்தனை சதவீதம் பேர் பலன் பெறுகின்றனர் என்றும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கடன்கள், வழங்கப்பட்ட தொகை மற்றும் விளிம்புப் பண மானியங்கள் குறித்த விவரங்கள் யாவை? என்றும் அவர் கேட்டுள்ளார்.






