
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 28ம் தேதி தொடங்கி வரும் பிப்ரவரி 13ம் தேதிவரை முதற்கட்டமாகவும், மார்ச் 9ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடைபெறுகிறது. மொத்தம் 30 அமர்வுகள் இந்த கூட்டத்தொடரில் நடைபெற உள்ள நிலையில், 2026-27 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நேற்று (பிப்ரவரி 1) மக்களவையில் தாக்கல் செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு தேவையான உருப்படியான ஒரு விசயமும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், வழக்கம்போல இந்த முறையும் தமிழ்நாட்டுக்கு தேவையான ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதற்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று (பிப்ரவரி 2) குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், 2020 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான லடாக் மோதல் குறித்து ராணுவ ஜெனரல் எம்.எம். நரவனே எழுதி இதுவரை வெளிவராத புத்தகம் குறித்து எழுதப்பட்ட கட்டுரையினை கையில் வைத்துக்கொண்டு தனது பேச்சை தொடங்கினார். இது மக்களவையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
ராகுல் காந்தி அந்த புத்தகத்தில் இருக்கும் வரிகளை வாசிக்கத் தொடங்கியதும், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். “வெளிவராத ஒரு புத்தகத்தை அவையில் வாசிப்பது விதிமீறல்” என ராகுல் காந்தியின் பேச்சை தடுத்தார்.

ராகுல் காந்தி தனது கையில் பிரபல பத்திரிகையில் வெளியான முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே எழுதிய 'Four Stars of Destiny' புத்தகத்தில் உள்ள கட்டுரையினை வைத்திருந்தார். அதில் இந்திய மற்றும் சீன துருப்புகளுக்கு இடையே நடந்த மோதல், இது கிழக்கு லடாக் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து புத்தக்கத்தில் இருப்பதை பல முறை பேச முயன்றார். அப்போது ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ ஆகியோர் பலமுறை குறுக்கிட்டு அவரை பேசவிடாமல் தடுத்தனர்.
புத்தகமே வெளியாகாத போது அதனை எப்படி அவையில் வாசிக்க முடியும்? என அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
எனினும் பாஜகவினரின் குறுக்கீடல்களுக்கு நடுவே தனது பேச்சை தொடர்ந்த ராகுல் காந்தி, “அந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது... அது அவர்களை மிகவும் அச்சுறுத்துகிறது? அவர்கள் பயப்படவில்லை என்றால், நான் தொடர்ந்து படிக்க அனுமதிக்க வேண்டும். தான் மேற்கோள் காட்டிய கட்டுரையும் புத்தகமும் 100 சதவீதம் உறுதிசெய்யப்பட்டவை.
புத்தகத்தில் பா.ஜ.க.வை இவ்வளவு தூரம் அச்சுறுத்தும் வகையில் என்ன இருக்கிறது? நீங்கள் பயப்படவில்லை என்றால், என்னைத் தொடர்ந்து வாசிக்க அனுமதிக்க வேண்டும். எந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்திய - சீன விவகாரம் குறித்துப் பேச விடாமல் தடுக்கிறீர்கள்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

ஒன்றிய பா.ஜ.க அரசின் அராஜகப்போக்கு எந்த அளவிற்கு உள்ளதென்றால், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரையே மக்களவையில் பேச அனுமதிப்பதில்லை. நாட்டின் பாதுகாப்பு குறித்து ராகுல் காந்தி பேச முயலும்போது அதனை தடுக்கும் விதமாக மக்களவை சபாநாயகர், எதிர்க்கட்சி எம்.பிக்கள் என தொடர்ந்து முழக்கம் எழுப்பி அவரை தடுத்துள்ளனர்.
நாட்டின் எதிர்க்கட்சி தலைவருக்கே இந்த நிலைமையை மக்களவையில் ஏற்படுத்தி வைத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு. இது நாட்டு மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.








