முரசொலி தலையங்கம்

வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் கட்டியம் கூறும் மாநாடாக திருவண்ணாமலை சந்திப்பு அமைந்துவிட்டது.

வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின்
கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (16-12-2025)

வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு!

திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியின் சார்பில் திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக நடைபெற்றுள்ளது. ஒரு இயக்கம் தங்களோடு இணைத்துக் கொள்ளும் படைவீரர்களுக்கு எத்தகைய பயிற்சியை அளிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் சுட்டிக் காட்டும் சந்திப்பாக திருவண்ணாமலைச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

‘‘இன்று பல கட்சிகள், இயக்கங்கள் உறுப்பினர்கள் சேர்க்கவே தடுமாறிக்கொண்டிருக்கும்போது, இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் நம் இளைஞர்அணி ஒவ்வொரு பூத் வரையிலும் நிர்வாகிகளை நியமனம் செய்திருக்கிறது. அந்த வகையில், இன்று 91 சட்டமன்றத் தொகுதிகளில் மாவட்டம், மாநகரம், ஒன்றியம், நகரம் முதல் பாகம் வரை, பூத் வரையிலும் அமைப்பாளர், துணை அமைப்பாளர் என ஒரு லட்சத்து 38 ஆயிரம் நிர்வாகிகள் இந்தச் சந்திப்புக்கு நீங்கள் வருகை தந்திருக்கிறீர்கள்”என்று இளைஞரணிச் செயலாளர் - துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த இலட்சக்கணக்கானவர்களும் இலட்சிய வேங்கைகளாக இருப்பதுதான் சிறப்பாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலுக்காகத் தொடங்கப்பட்ட இயக்கமல்ல; கொள்கைக்காகத் தொடங்கப்பட்ட இயக்கம். அக்கொள்கையை வென்றெடுக்கப் போராடிய இயக்கம். வாதாடிய இயக்கம். போராட்டங்களின் வெற்றியானது ஆட்சி அதிகாரத்தின் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்த பிறகுதான் தேர்தல் களத்தில் இறங்கியது கழகம். 'யாரையோ செய்யச்சொல்வதை விட, நாமே செய்து காட்டுவது' என்ற முடிவுக்கு பேரறிஞர் அண்ணாவும், அவரது தம்பிமார்களும் வந்தார்கள். அதன் பிறகுதான் தேர்தலில் போட்டியிடலாம் என்ற முடிவையே கழகம் எடுத்தது.

1967 ஆம் ஆண்டு முதல் அமைக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக அரசானது, தனது திராவிடத் தமிழியல் கொள்கையை செயல்படுத்திக் காட்டும்அரசாகவே செயல்பட்டு வருகின்றது. ஆறாவது முறையாகக் கழகத்தை ஆட்சியில் அமர வைத்த மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது அரசுக்கு ‘திராவிட மாடல் அரசு' என்று பெயர் சூட்டி கொள்கைப் பூர்வமான ஆட்சியை நடத்தி வருகிறார். ‘இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு' என்று அறிவித்திருக்கிறார்.

அதேநேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கொள்கைப் பாசறைக்குத் தேவையான படைவீரர்களைத் தயாரித்து வருகிறார் இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள்.

இளைஞரணிச் செயலாளராக உதயநிதி அவர்கள் ஆனது முதல் இலட்சக்கணக்கான இளைஞர்களைக் கழகத்துக்குள் கொண்டு வந்து சேர்த்தார். அப்படிச் சேர்ந்த இளைஞர்களுக்கு கொள்கைப் பாசறை பயிற்சி முகாம்களை நடத்தினார். பாசறைக் கூட்டங்களை நடத்தினார். ‘முரசொலி'யின் கடைசிப் பக்கத்தை பாசறை பக்கமாக வடித்தார். கொள்கைகளைப் பரப்ப முத்தமிழறிஞர் பதிப்பகம் தொடங்கினார்.

பல்வேறு புத்தகங்களை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறார். தொகுதி தோறும் கலைஞர் நூலகங்களை திறந்து வைக்கிறார். இளம் பேச்சாளர்களை உருவாக்கினார். இளம் எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையாளர்களை உருவாக்கி வருகிறார். அறிவுத் திருவிழாவை நடத்தினார். கலைஞரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வருகிறார்.

இந்த வரிசையில் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி இருக்கிறார். 1.50 இலட்சம் நிர்வாகிகள் கூடிய இச்சந்திப்பானது வடக்கு மண்டல மாநாட்டைப் போல நடைபெற்றுள்ளது. அமைச்சர் எ.வ.வேலுவின் முன்னெடுப்பில் நடைபெற்றுள்ள இந்தப் பிரமாண்டமான மாநாடு, ஒரு மாநாடு எப்படி நடக்க வேண்டும் என்பதற்கான நேரடிப் பயிற்சி மாநாட்டைப் போல நடைபெற்றுள்ளது. பேச்சு மட்டுமல்ல; செயலும் எவ்வளவு சரியாக இருக்க வேண்டும் என்பதை ஊருக்கு உணர்த்திவிட்டது இந்த மாநாடு.

வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின்
கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!

‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்று பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த அதே பண்பாட்டுக்கு உதாரணமாக இந்த மாநாட்டை நடத்திக் காட்டி இருக்கிறார் உதயநிதி அவர்கள். அவரே சொன்னது போல, 'இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாது என்று சொல்வார்கள், அது தவறானது, இங்கே பாருங்கள் எங்கள் இளைஞர்கள் எத்தகைய கட்டுக்கோப்புடன் இருக்கிறார்கள்' என்பதை பெருமையுடனும் பெருமிதத்துடனும் உணர்த்துவதாக இச்சந்திப்பு இருந்தது.

‘இயக்கத்துக்குள் எத்தனை பேர் சேர்ந்தார்கள் என்ற எண்ணிக்கையை விட, அவர்களை கொள்கை வீரர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணமே முக்கியமானது' என்று கழகத் தலைவர், முதலமைச்சர் அவர்கள் ஒருமுறை சொன்னார்கள். ‘நமக்குத் தேவை உறுப்பினர்கள் அல்ல, கொள்கைவாதிகள்' என்று குறிப்பிட்டார். அத்தகைய கொள்கைவாதிகளை உருவாக்கி வருகிறார் மாண்புமிகு உதயநிதி அவர்கள். இக்கொள்கைவீரர்களுக்கு முதலமைச்சர் இட்ட கட்டளை என்பது மிக மிக முக்கியமானது.

“2026 தேர்தலில், மக்கள் முன்னால் இருக்கும் கேள்வி என்ன என்றால், ‘இன்னும் ஐம்பது ஆண்டுகள் முன்னோக்கி நடைபோடப் போகிறோமா? இல்லை. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுக்க முயற்சி செய்பவர்களுக்கு அடிபணியப் போகிறோமா?"

அந்தக் கேள்விக்கு மக்கள் அளிக்கப் போகும் விடை: 'திராவிட மாடல் ஆட்சி 2.0' . அதற்கு நீங்கள் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும்! ஏன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தில்தான், தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழினத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது! அந்த எதிர்காலம், வளம் நிறைந்ததாக, ஒளி நிறைந்ததாக தமிழ்நாடு நம்பர் ஒன் என்று சிங்க நடைபோடுவதாக அமைய வேண்டும்!”என்று தெளிவாக வழிகாட்டி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் கட்டியம் கூறும் மாநாடாக திருவண்ணாமலை சந்திப்பு அமைந்துவிட்டது.

banner

Related Stories

Related Stories