
முரசொலி தலையங்கம் (15-12-2025)
வெல்லும் தமிழ்ப் பெண்கள்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை விரிவாக்கி உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பேர் உரிமைத் தொகை பெற்று வந்தார்கள். 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பேருக்கு விரிவாக்கம் செய்துள்ளார் முதலமைச்சர். இனி மொத்தம் ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 பேர் பெறப் போகிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விதையாய் மாறி, 18 மாநிலங்களில் விருட்சமாக எழுந்து நிற்கிறது.
கர்நாடகாவில் கிரகலட்சுமி என்ற பெயரிலும், மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் லட்லி பெஹ்னா யோஜனா என்ற பெயரிலும், மகாராஷ்டிராவில் முதல்வர் லாட்கி பாஹின் யோஜனா எனவும், ஒடிசாவில் சுபத்ரா யோஜனா என்ற பெயரி- லும், ஜார்க்கண்டில் மைய சம்மன் யோஜனா என்ற பெயரிலும், இமாசலப் பிரதேசத்தில் இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சுக் சம்மன் நிதி யோஜனா என்ற பெயரிலும், சத்தீஷ்கரில் மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற பெயரிலும், மேற்கு வங்காளத்தில் லட்சுமி பந்தர் என்ற பெயரிலும், சிக்கிமில் சிக்கிம் ஆமா யோஜனா என்ற பெயரிலும், புதுச்சேரியில் மகளிர் உதவித் தொகை என்ற பெயரிலும், மகளிர் உரிமைத் தொகை திட்டம் 10 மாநிலங்களில் இன்றைக்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 லட்சம் பேரை இத்திட்டத்தில் இருந்து நீக்கினார்கள். அதுபோலத் தமிழ்நாடு யாரையும் நீக்காமல், விடுபட்டவர்களையும் சேர்த்தது. இதுதான் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சிறப்பு ஆகும்.
தமிழ்நாடு முழுவதும் 18 ஆயிரம், ‘உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களை நடத்தி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பங்களை கேட்டுப் பெற்றது திராவிட மாடல் அரசு. அதில் இருந்து மகளிர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இது அந்தப் பெண்களின் வாழ்வாதாரத்திற்கும் மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவுகிறது. குறிப்பாகக் கிராம பொருளாதாரம் இதன் மூலம் தன்னிறைவு பெறுகிறது. உதவித் தொகை பெறும் பெண்கள் அதனைத் தங்கள் தேவைகளுக்குச் செலவிடும் போது அந்தப் பணம் கடைகள் வழியாகச் சென்றடைந்து பொருளாதார வளர்ச்சிக்குப் பலன் அளிக்கிறது.
சொந்தக் காலில் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள, மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், சுய உதவிக்குழு, புதுமைப்பெண் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி, பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது.
அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்கக் கருத்தை வெளியிட்டார் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையைப் பிச்சை போடுவதாகச் சொல்லி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களை பா.ஜ.க. நடிகை குஷ்பு இழிவுபடுத்தினார். பா.ம.க.வின் சவுமியா அன்புமணி, 'உங்க 1000 ரூபாய் யாருக்கு வேணும்?' எனக் கேவலமாகப் பேசினார்.


புதிதாகக் கட்சி ஆரம்பித்திருப்பவர்களும் (த.வெ.க.) மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த வேண்டும் எனப் பேசுகிறார்கள்.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அரசு வழங்கும் நிவாரணத் தொகையைக் கேலி செய்தார். "வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் 500, 1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை” என்றார்.
மகளிர் உரிமைத் தொகை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தும் பா.ஜ.க.வினர் கூட தமிழ்நாட்டில் அந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள். இவர்களின் குணமும் நிறமும் ஒன்றுதான். இவர்கள் ஒன்றாகக் கூட்டணி சேர்ந்து, தி.மு.க.வை எதிர்க்கவில்லை. ஒட்டுமொத்தப் பெண்களின் நலனையே அழிக்கக் கைகோர்த்திருக்கிறார்கள்.
மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அதைத்தான் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்' நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாடு அறிந்தது.
‘“கூலி வேலைக்குச் சென்று எனது குடும்பத்தை கவனித்து வந்தாலும் அந்தப் பணம் போதுமானதாக இல்லை. மாதம் எனக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பது, பத்தாயிரத்தைப் போல இருக்கிறது. எனது எல்லாக் கஷ்டத்தையும் போக்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி”என்று கண்கலங்கச் சொன்னார் மாதவி என்ற பெண்.
ஈழத்தில் இருந்து வந்த சாரா என்ற பெண், இலங்கை மக்களுக்காக அரசு சார்பில் கட்டிக் கொடுத்த வீடுகளைப் பற்றி பெருமையாகச் சொன்னார். முதலமைச்சரை ‘அப்பா' என்று விளித்தார். அதை ஒரு கைக்குட்டையில் எம்பிராய்டு செய்து எடுத்து வந்து கொடுத்த காட்சி, மாண்புமிகு முதலமைச்சருக்கு கிடைத்த நற்சாட்சி ஆகும்.
‘நீங்கள் தைரியமாக முன்னேறுங்கள். உங்களை அழைத்துச் செல்ல இந்த அரசு இருக்கிறது'என்றார் நடிகை ரோகினி. 'நீதிக்கட்சி ஆட்சி முதல் பெண்கள் முன்னேற்றத்துக்கு திராவிட இயக்கம் பாடுபட்டு வருகிறது' என்பதை நடிகர் சத்- யராஜ், இயக்குநர் ஞானவேல் ஆகியோர் பட்டியலிட்டார்கள். ‘பெண்கள் மேடையேறிப் பேசியதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை' என்றார் பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹர் . ‘தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், புரட்சி- யாளர் காரல் மார்க்ஸ் ஆகியோரின் குரலாக இருக்கிறார் நமது தோழர் மு.க.ஸ்டாலின்'என்றார் இயக்குநர் ராஜூ முருகன்.
மகளிர் சுய உதவிக்குழு மூலமாக தனது வெற்றி நிச்சயமாகி வருவதாக மாலா என்ற பெண் பட்டியலிட்டுச் சொன்னார்.
‘வீட்டை விட்டு வெளியே வராத நான், இன்று என் வாழ்க்கையில் முதல் தனிப் பயணத்தை சென்னையில் இருந்து தொடங்கி இருக்கிறேன். யாரின் துணையும் இல்லாமல் தனியாக வர முடிந்ததே முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களால்தான். இந்த விழாவில் என்னை பேச அழைத்த போது திருப்பரங்குன்றம் மலைமேல் ஏறி நின்று ‘நா ஜெயிச்சுட்டேன் முருகா' என்று கத்திவிட்டு வந்தேன். எனக்கு தைரியம் தந்த முதலமைச்சருக்கு நன்றி”என்று பேசினார் சரண்யா.
தமிழ்ப் பெண்களை, வெல்லும் பெண்களாக மாற்றிய முதலமைச்சர்தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.






