
முரசொலி தலையங்கம் (13-12-2025)
பழனிசாமியின் பழைய ஊழல்கள் - 2
குட்கா வியாபாரிகளிடம் அரசாங்கத்தின் பெயரால் மாமூல் வசூல் செய்தது பழனிசாமி ஆட்சிதான் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சென்னையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017–ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் குற்றச்சாட்டு எழுந்தது. குட்கா வியாபாரிகளிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. அப்போது தங்களது வியாபாரத்துக்குத் துணை நின்றவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யார் என்பதை டைரி எழுதி வைத்திருந்தார்கள் வியாபாரிகள். அந்த நிறுவனத்தில் இருந்து 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது அ.தி.மு.க. ஆட்சியில்.
இது தொடர்பான வழக்கில் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதிலில், “டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான குட்கா பொருள்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை விற்பதற்காக ரூ.55 கோடி வரை ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது. வருமான வரித்துறையும் இதனை வலிமைப் படுத்துவது மாதிரியான ஆதாரங்களைக் கொடுத்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றது தொடர்பாக வருமான வரித்துறை அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்து அமைச்சரான விஜயபாஸ்கர், இரு டி.ஜி.பிக்கள் பெயர்கள் இருந்தன. ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் இவர்கள் பெயர் இடம் பெறாத வகையில் பழனிசாமி இவர்களைக் காப்பாற்றினார். சில ஊழியர்களை மாட்டி விட்டு அ.தி.மு.க. அமைச்சர்களைத் தப்பிக்க வைத்தார் பழனிசாமி.
வருமான வரித்துறை, அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கொண்ட கோப்பு ஒன்றை அனுப்பி இருந்தது. அந்த ஆவணங்களையே காணாமல் ஆக்கினார்கள் பழனிசாமி ஆட்சியில். குட்கா வழக்கை விசாரித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி. மஞ்சுநாதா திடீரென்று மாற்றப்பட்டார். அவர் இருந்தால் இந்த வழக்கை முறையாக நடத்திவிடுவார் என்று பயந்து தூக்கி அடித்தார் பழனிசாமி. உயர் நீதிமன்ற ஆணையின்படி விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டு – குட்கா வழக்கை விசாரித்து வந்த வி.கே. ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ். 5 மாதங்களில் பழனிசாமியால் மாற்றப்பட்டார்.
குட்கா வழக்கில் தொடர்புடைய சிவக்குமார், செந்தில்முருகன் – ஆகிய இரண்டு அரசு ஊழியர்கள் மீது ‘வழக்குத் தொடர’ சி.பி.ஐ. அனுமதி கோரியது. அதற்கு பழனிசாமி அரசு அனுமதி தரவில்லை. திரும்பத் திரும்பக் கேட்ட பிறகு 20 மாதங்கள் கழித்து அனுமதி அளித்தார் பழனிசாமி. அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீதான நடவடிக்கைக்கு பழனிசாமி இறுதிவரை அனுமதி தரவே இல்லை.
எந்த அதிகாரிகள் மீது புகார் எழுந்ததோ, அவருக்கே பணி நீட்டிப்பு தரப்பட்டது பழனிசாமி ஆட்சியில். தன் மீதான குற்றச்சாட்டுக்குப் பரிகாரம் தேட வழக்குப் போட அவருக்கே அனுமதியும் தரப்பட்டது. பழனிசாமி ஆட்சியில் குட்கா மட்டுமல்ல, ஊழலும் தலைவிரித்தாடிய காட்சிகள் ஆகும். இந்த வழக்கு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
•பழனிசாமி ஆட்சியில் பல்வேறு டெண்டர்களை எடுத்து நடத்திய சுப்பிரமணியம், இராமலிங்கம் ஆகியோர் குடும்பத்துக்கும் பழனிசாமி குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை பழனிசாமி பகிரங்கமாகச் சொல்லத் தயாரா? இந்த சுப்பிரமணியமும் இராமலிங்கமும்தான் டெண்டர்களை எடுத்து பழனிசாமிக்கு பண சப்ளை செய்தவர்கள். இது யாருக்குமே தெரியாது என்பது போல யோக்கியர் வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. அரசாங்க கஜானாவை சம்பந்தி, சம்பந்திக்கு சம்பந்தி என்று முறைப்படி பங்கு வைத்தவர்தான் பழனிசாமி.

1. யார் மீதுதான் ஊழல் புகார் இல்லை?
2. எனது உறவினர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்!
3. எனது உறவினர்கள் ‘இ’ டெண்டர் போட்டது எனக்குத் தெரியாது!
– இவைதான் பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது சொன்ன பதில்கள் ஆகும்.
•முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி, தங்கமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தி இருப்பது பழனிசாமிக்கு மறந்து போய்விட்டதா?
• டாக்டர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். (2023 மே 22)
• கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக 45.20 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தர்மபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ( 2023 மே 22)
• காமராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக 58.44 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ( 2023 ஜூலை 11)
• இப்போதும் பழனிசாமி, பா.ஜ.க.வின் முதுகுக்குப் பின்னால் எதற்குப் பதுங்குகிறார் என்பது அனைவரும் அறியாதது அல்ல. கடந்த ஜனவரி மாதம் ‘ரெய்டு அஸ்திரத்தை’ பா.ஜ.க. எடுத்தது. பழனிசாமியின் உறவினர்களுக்குச் சொந்தமான 26 இடங்களில் ரெய்டு நடந்தது. இதுதான் அவரை பா.ஜ.க.வை நோக்கிப் பணிய வைத்துள்ளது.
இப்படி தொடக்கம் முதல் இப்போது வரை ஊழலால் உருவானவர் தான் பழனிசாமி. தனது ஊழலை மறைக்க, தன்னைக் காத்துக் கொள்ள அ.தி.மு.க.வை பலியிட்டுக் கொண்டு இருப்பவர் தான் பழனிசாமி. அதனால்தான் சொந்தக் கட்சித் தொண்டர்களே அவரை மதிப்பது இல்லை.






