தமிழ்நாடு

“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!

சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த மண்டலக் குழுத்தலைவர்களிடம் தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (15.12.2025) சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் சென்னை, திருவள்ளூர், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதை தொடங்கி வைப்பதன் அடையாளமாக சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த மண்டலக் குழுத்தலைவர்களிடம் தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக திருவள்ளூர், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றார்கள். 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த 200 வார்டுகளுக்கும் தலா 3 வீதம் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய மொத்தம் 600 எண்ணிக்கையிலான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகள் கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். 

மேலும், ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சருடைய பாக்ஸ் கிரிக்கெட் இளையோர் விளையாட்டரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். 

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இன்றைக்கு விளையாட்டு உபகரணங்களை இங்கே வழங்க இருக்கின்றோம்.

“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!

சென்னை, கோயம்புத்தூர், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும்  இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்களை இன்றைக்கு வழங்க இருக்கின்றோம்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாக்க வேண்டும் என்பது தான் முதலமைச்சர் அவர்களுடைய ஒரே நோக்கம், இந்த அரசினுடைய ஒரே லட்சியம். சென்ற 2024 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். 

ஏற்கனவே, அனைத்து கிராமங்களுக்கும் இந்த உபகரணங்கள் சென்று சேர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 12,500 ஊராட்சிகளுக்கு
85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு கிடைத்த மிகப் பெரிய ஒரு வரவேற்பை பார்த்து நம்முடைய முதலமைச்சர் அவர்கள், கிராமங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நகர்ப்புறங்களுக்கும் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டார்கள்.

கடந்த மாதம் செங்கல்பட்டில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தோம். இன்றைக்கு சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 3,100 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடம் கொடுக்கப்பட இருக்கிறது.

எல்லா ஊர்களிலும் கிராமப்புறங்களில் பார்த்தீர்கள் என்றால், மைதானம் இருக்கும். ஆனால், சென்னை மாதிரியான
பெரிய நகரங்களில் பார்த்தீர்கள் என்றால், ஒவ்வொரு தெருவும்,
ஒவ்வொரு சந்தும்தான் நமக்கு மைதானம்.

வந்திருக்கக்கூடிய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உங்களை எல்லாம் பார்க்கும் போது, எனக்கு என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்கள் நினைவுக்கு வருகிறது. விளையாடுவதற்கு மைதானம் இருக்காது, நம்முடைய தெருதான் நமக்கு மைதானம், அதுவும் கிரிக்கெட் விளையாடும்போது பந்து பக்கத்து வீட்டிற்கு சென்றுவிடும்.

ஒரு வீட்டிற்குள் அடித்துவிட்டு கொடுப்பார்களா, கொடுக்கமாட்டார்களா என்று 5 நிமிடம் காத்திருப்போம். இந்த அனுபவம் நிச்சயமாக உங்களில் பலபேருக்கு அதுவும் தெருக்களில் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு இருக்கும், சென்னையில் குறிப்பாக தெருக்களில் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு அதிகமாக இந்த அனுபவம் இருக்கும்.

அப்படிப்பட்ட விளையாட்டு வீரர்களையெல்லாம் தேடி கண்டுபிடித்து, அதில் திறமையானவர்களை கண்டுபிடித்து, அவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க வேண்டும்  என்பதுதான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரண திட்டத்தினுடைய ஒரே நோக்கம்.

நம்முடைய அரசு கடந்த நான்கரை வருடங்களில் ஏராளமான விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து சென்னையிலும் சரி, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்  பரிசுத் தொகை மட்டும் முதலமைச்சர் அவர்கள் கொடுத்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு முதன் முறையாக சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டி சென்னையிலும், மதுரையிலும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. நேற்று உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் கடந்த ஒரு வாரம் நடத்தி, அதில் இந்திய அணி முதன் முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இன்றைக்கு காலையில் அவர்களை வரவழைத்து முதலமைச்சர் அவர்கள், அவர்களுக்கு பாராட்டை தெரிவித்தார்கள். 

“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!

இப்படி பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகளில் இன்றைக்கு தமிழ்நாட்டு வீரர்கள் பல சாதனைகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். இந்த சாதனைகள் இன்னும் அதிகமாக வேண்டும் என்று தான் பல முன்னெடுப்புகளை நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக, நம்முடைய விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்கு சென்று எந்த தயக்கமும் இல்லாமல் விளையாட வேண்டும். அவர்களுடைய பயணச் செலவைப் பற்றி அவர்கள் யோசிக்க கூடாது. அவர்களுக்கு திறமை இருந்தால் அவர்களுக்கான அந்த வசதி வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றுதான் தமிழ்நாட்டில் முதன்முதலில்  தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை  மூன்று வருடங்களுக்கு முன்பு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆரம்பித்தார்கள்.

விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்று வந்தபிறகு அவர்களுக்கான உயரிய ஊக்கத்தொகை முதலமைச்சர் அவர்கள் கொடுக்கிறார். ஆனால் விளையாட்டு வீரர்கள் இங்கு இருந்து சென்று கலந்து கொள்ள அவர்கள் தயாராவதற்கு உதவி செய்வதுதான் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது. 

விளையாட்டு வீரராக சென்றால் வேலைக்கு செல்ல மாட்டாய். நீ விளையாட்டிலேயே முயற்சி செய்வாய், உன் வாழ்கையே போய்விடும் என்று பொதுவாக வீட்டில் திட்டுவார்கள், சொல்வார்கள். ஆனால் அப்படி கிடையாது விளையாட்டிலும் சாதித்தால், நிச்சயம் ஒரு நல்ல அரசு வேலை கிடைக்கும் என்பதற்காக 3 சதவீதம் இட ஒதுக்கீட்டில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பையும் நம்முடைய அரசு வழங்கி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், ஒவ்வொரு முதலமைச்சர் மினி ஸ்டேடியம். இந்த மினி ஸ்டேடியத்தில் குறைந்தது 5 விளையாட்டு வசதிகள், அதில் எல்லா ஸ்டேடியத்திலும் உடற்பயிற்சி கூடத்தோடு, கிட்டத்தட்ட இன்றைக்கு 70, 75 ஸ்டேடியங்களுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு திட்டம் தான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குகின்ற இந்த திட்டம்.

இன்றைக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக வந்து இருக்கக்கூடிய நீங்கள் ஒவ்வொருவரும் நாளைக்கு ஒரு பெரிய ஸ்போர்ட்ஸ் ஸ்டாராக நிச்சயம் வருவீர்கள் என்ற நம்பிக்கை இந்த அரசிற்கு இருக்கிறது. நீங்கள் நிச்சயம் அதை செய்து காட்டுவீர்கள். 

இன்றைக்கு நம்முடைய அரசு விளையாட்டுத் துறையில் செய்து வருகின்ற பல்வேறு பணிகளுக்காக, செய்து வருகின்ற சாதனைகளினால், இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு இடங்களில் இருந்து நம்முடைய அரசிற்கு நம்முடைய மாநிலத்திற்கு பாராட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த CII Business Sports award 2025 நிகழ்ச்சியில் The best State for a promoting Sports development என்று ஒரு விருது, அதே மாதிரி FICCI TURF 2025 award என்று கடந்த 3 வருடங்களில் மட்டும் நம்முடைய தமிழ்நாட்டிற்கு 6 விருதுகள் நம்முடைய அரசிற்கு கிடைத்திருக்கிறது.

இதற்கெல்லாம் அரசு மட்டுமே காரணம் கிடையாது, இதற்கெல்லாம் இங்கே வந்திருக்ககூடிய, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் வெற்றி பெறுகிறார்கள். அதற்கும் சேர்த்து வழங்கப்பட்ட அங்கீகாரம்தான் இந்த விருதுகள். 

“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!

அப்படிப்பட்ட பெருமைமிகு வீரர்களில் இரண்டு பேர் இன்றைக்கு உங்கள் முன்பு இந்த மேடையில் உட்கார்ந்து இருக்கின்றார்கள். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கேரம் வீராங்கனை தங்கை கீர்த்தனா, வறுமையான, குடும்பச் சூழலோடு போராடி தன்னுடைய திறமையால் இன்றைக்கு கேரம் விளையாட்டில் உலக சாம்பியனாக உயர்ந்திருக்கிறார்கள் சகோதரி கீர்த்தனா அவர்கள்.

சமீபத்தில் மாலத்தீவில் நடந்த உலகக் கோப்பை கேரம் போட்டியில் singles, doubles, team matches என எல்லாவற்றிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள். இன்றைக்கு மதியம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அவர்களை பாராட்டி உயரிய ஊக்கத் தொகையாக 1 கோடி ரூபாய் நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது. தங்கை கீர்த்தனாவிற்கு அவருக்கும், அவருடைய கோச் அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நம்முடைய பாராட்டுக்களை கைத்தட்டல்கள் மூலம் தெரிவிப்போம்.

கீர்த்தனாவைப்போல, இங்கே இன்னொரு விளையாட்டு வீராங்கனை, சாதனையாளர் நம் முன் உட்கார்ந்து இருக்கிறார்கள். சகோதரி ஸ்ருதி ரத்தினவேல். மதுரையில் கூடைப்பந்து விளையாடத் தொடங்கிய இவர் இப்போது சீனா வரைக்கும் சென்று இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 2025இல் மட்டும் தேசிய அளவிலான போட்டிகளில் 2 gold medals, ஒரு bronze medal  என வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள்தான் சகோதரி ஸ்ருதி ரத்தினவேல். அதோடு, அவர்களுடைய அனுபத்தை அவர்களே சொன்னார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அழைத்து அவர்களுக்கு 3 percent sports quota-வில் வேலைவாய்ப்பு கொடுத்ததையும் இங்கே அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

இன்றைக்கு விளையாட்டு வீராங்கனை ஸ்ருதி ரத்தினவேல்,  அரசினுடைய TNPL நிறுவனத்தில் Corporate Secretarial Officerஆக இன்றைக்கு பெருமையோடு பணியாற்றி வருகிறார்கள், இவர்களை மாதிரி உங்களிலிருந்து இன்னும் பல கீர்த்தனாக்கள், பல ஸ்ருதிக்கள் வரவேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய ஒரே எண்ணம், ஆசை. அதற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களும் நானும், உங்களுடைய குடும்பத்தில் ஒருத்தராக இருந்து, நிச்சயமாக எப்போதுமே உங்களுக்கு தேவையான உதவிகளை எந்த நேரத்திலும செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

விளையாடுங்கள், விளையாட்டால் உடல் நலம், மனநலம் இரண்டுமே மேம்படும். எனவே, Mobile Screen Time-ஐ குறைத்துக் கொண்டு, இந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி, தொடர்ந்து களத்தில் பயிற்சி செய்து, உங்களுக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் இருக்கின்றதோ அதை வெளிக்காட்டி தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து, தமிழ்நாட்டிற்கும், இந்திய ஒன்றியத்திற்கும் நீங்கள் அத்தனைபேரும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த விளையாட்டு உபகரணங்களை தயவு செய்து பத்திரமாக பாதுகாக்கவும், பராமரிக்கவும், தொடர்ந்து உபயோகித்து, இதை முறையாக அதற்கான லெட்ஜரை பதிவு செய்து, அதை முறையாக பராமரிக்க வேண்டும் என்று துறையினுடைய அமைச்சராக உங்களை கேட்டுக் கொள்கின்றேன். 

எனவே, கலைஞர் விளையாட்டு உபகரணங்களை பெற்றிருக்கக்கூடிய அனைத்து விளையாட்டு வீரர்கள், தம்பிகள், தங்கைகள் உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, விடைபெறுகின்றேன், நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories