
இந்திய விமான சேவைகளில் தொடர்ச்சியாக குழப்பங்களும், குறைபாடுகளும் நிலவுவதாக மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவருமான தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் இண்டிகோ விமான சேவையில் தொடர்ச்சியான பாதிப்பு, சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில், புது டெல்லி விமான நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டும், முந்நூற்றுக்கு மேற்பட்ட விமானங்களின் சேவை தாமதமானதும், இந்திய விமான போக்குவரத்துத் துறையின் அவலநிலையை தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறது. இதனால் லட்சக்கான விமான பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
விண்ணைத் தொடும் பயண கட்டணம் ஒரு பக்கம்; அவசர, அவசிய தேவைக்கு குறித்த நேரத்தில் பயணம் செய்யமுடியாத நிலை; இதனால் ஏற்படும் கால விரயம் என தொடர்ந்து சொல்லொன்னா துயரத்தை அனுபவித்து வருகின்றனர் பயணிகள்.
இதேபோல் நீண்ட நாள்களாகவே ஏர் இந்தியா விமான சேவையிலும், காலதாமதம் உள்ளிட்ட சேவை குறைபாடு இருந்துவருகிறது. நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள், ரயில் நிலையங்களை விமான நிலையங்கள்போல் மாற்றி அமைத்திடுவோம் என்று கூறிவரும் நிலையில், தற்போது பல விமான நிலையங்கள் ரயில் நிலையங்களைவிட மோசமான நிலையில் காட்சி அளிப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான நிரந்தர தீர்வினை காணாத ஒன்றிய அரசு, பயணிகளின் இன்னல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.” என குறிப்பிட்டுள்ள தயாநிதி மாறன், அவர் மேற்கொண்ட ஏர் இந்தியா விமான பயணத்தில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பயணிகள் அவதிக்குள்ளானதையும் சுட்டிக்காட்டி, தனது எக்ஸ் பக்கத்திலும் கடுமையான குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
இன்று காலை 6:50 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்ட AI2832 ஏர் இந்தியா விமானம், காலை 9:20 மணிக்கு டெல்லியில் தரையிறங்கியது. ஆனால், விமான நிலைய பார்க்கிங்கில் இடம் இல்லாததால், ஒரு மணி நேரம் டாக்ஸிவேயில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு ஊழியர்கள் யாரும் வராததால் மேலும் இரண்டு மணி நேரம் விமானத்திற்குள் பயணிகள் சிக்கித் தவித்தனர். இந்த விமானத்தில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல பயணிகள் இருந்தனர்.
தனியார்மயமாக்கப்பட்ட பிறகான “புதிய, மேம்படுத்தப்பட்ட” ஏர் இந்தியா இதுதானா?
விமானத் துறையில் நிலவும் தொடர்ச்சியான குழப்பங்கள். பொறுப்பின்மையை பார்க்கும்போது ஒன்றிய அரசுக்கு இதை சீர்செய்யும் எண்ணம் இல்லை என்றே தோன்றுகிறது. இது திறமையின்மை மட்டுமா அல்லது ஒரு புதிய நிறுவனத்திற்கு வழியமைக்க விமானத் துறையை சீரழிக்கும் முயற்சியா? என கேள்வி எழுப்பியுள்ள தயாநிதி மாறன் எம்.பி அவர்கள், தனது புகாரை சம்பந்தப்பட்ட துறைக்கும் அதிகாரிகளுக்கும் டேக் செய்துள்ளார்.
இந்த சம்பவம், இந்திய விமானத் துறையின் தொடர்ச்சியான பிரச்சனைகளை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை தயாநிதி மாறன் நாடாளுமன்றத்திலும், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சகத்துக்கும் கடிதங்கள் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.








