Tamilnadu

பொங்கல் பரிசு: நீதிமன்ற ஆணையை மீறி பேனர் வைத்த ஆளுங்கட்சியினர்.. சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. முறையீடு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி 2 ஆயிரத்து 500 ரூபாய், அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்ட டோக்கன்களில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது எனவும் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில், இரு மாவட்டங்களில் மட்டும் ஆர்வ மிகுதியால் கட்சியினர் இதுபோல அச்சிட்டுவிட்டதாகவும், அனைத்து இடங்களிலும் அதிகாரப்பூர்மாக வழங்கப்படும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கவேண்டும் என, சுற்றறிக்கை பிறப்பிப்பதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சுற்றறிக்கையும் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில் உத்தரவாதத்தை பதிவு செய்து, டோக்கன்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறக்கூடாது என உத்தரவிட்டது.

இந்த பின்னணியில் இன்று காலை, தலைமை நீதிபதி அமர்வில் ஆஜரான திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், நேற்று பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக் காட்டி, உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை மீறி, பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் ரேஷன் கடைகள் முன் பேனர்கள் வைத்து இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக வழக்கு தொடரவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் அனுமதி கோரினார்.

இதை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு குறித்து அரசுத்தரப்புக்கு அறிவிக்கை கொடுத்து தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி அனுமதியளித்தது.

Also Read: பொங்கல் பரிசு வழங்கும் இடங்களில் அதிமுக பேனர்: உடனடியாக அகற்றக்கோரி அரசு செயலாளர்களுக்கு திமுக கடிதம்!