
முரசொலி தலையங்கம்
09.01.2026
‘பியூஷ்’ போன வாதங்கள் !
‘‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. கூட்டணி இந்துக்களுக்கு எதிரானது என்பது தெளிவாகிறது” என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சொல்லி இருக்கிறார்.
‘‘திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்’’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் இரு அமர்வு தீர்ப்பளித்து உள்ளது. இதனை வைத்துத்தான் பியூஸ் கோயல் இப்படி பேட்டி தந்துள்ளார். தமிழக பக்தர்களுக்கு நீதி கிடைத்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை இழித்தும் பழித்தும் பேசி வருவதாகவும், தனி நீதிபதி உத்தரவை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை என்றும், அந்த உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்தது துரதிஷ்டவசமானது என்றும், இது இந்து தர்மத்துக்கு விரோதமானது என்றும், அவர்களது இந்து விரோத மனப்பான்மையை பிரதிபலித்தது என்றும், இப்போது இரண்டு நீதிபதிகள் நீதியை நிலைநாட்டி விட்டதாகவும் பியூஷ் கோயல் சொல்லி இருக்கிறார்.
இவை அனைத்தும் பியூஷ் போன வாதங்கள் ஆகும். அவருக்கு திருப்பரங்குன்றம் எந்தத் திசையில் இருக்கிறது என்றோ, அங்கு நடந்தது என்ன விவகாரம் என்றோ தெரியாது.
‘திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என்பது தனி நீதிபதியின் தீர்ப்பு. அதனை இரண்டு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக எங்கே தீபம் ஏற்றப்படுமோ அங்கு தீபம் ஏற்றப்பட்டு விட்டது என்பதை மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவாரா?
கார்த்திகை தீபம் அன்று திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலில் காலம் காலமாக தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 3.12.2025 புதன்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வழக்கப்படி திருக்கோவிலுக்குள் பால தீபம் ஏற்றப்பட்டது.
அதன்பிறகு அதே நேரத்தில் வழக்கமாக ஏற்றக் கூடிய உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு, பின்பு சுவாமி புறப்பாடு ஆகி, பதினாறு கால் மண்டபம் எதிரே உள்ள இடத்தில் சொக்கப்பனை ஏற்றி சுவாமிக்கு ரஷை சாத்தப்பட்டது. இவை முறையாக நடந்தது. இது பக்தர்கள் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், வழக்கமான இடத்தை மாற்றி, வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒரு கும்பல், உள்நோக்கத்தோடு பல காலமாகச் செயல்பட்டு வந்தார்கள். மலைப்பகுதியில் இருக்கும் தர்காவுக்கு அருகில் இருக்கும் தூணில் தீபம் ஏற்றுவதன் மூலமாக இரு மதப்பிரிவினர் இடையே மோதலை உண்டாக்கி, அதன் மூலமாக குழப்பத்தை ஏற்படுத்தப் பார்த்தார்கள். இதனை தமிழ்நாடு அரசு அனுமதிக்க வில்லை. இதுதான் பிரச்சினை.

அதாவது பிரச்சினையை உருவாக்கி, அதன் மூலமாக மோதலை உருவாக்கி, அந்த மோதலை தமிழ்நாடு முழுக்கப் பரப்பி, தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்க ஒரு கும்பல் முயற்சித்தது. இதனை தமிழ் அரசு அனுமதிக்கவில்லை. அத்தகைய கலவரத்தை நிகழ்த்த முடியாத வேதனையைத் தான் பாசிச சக்திகள் இன்று வெளிப்படுத்தி வருகிறார்கள்.
‘தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்படுகிறது’ என்ற வதந்தியை பல காலமாக பரப்பி வருகிறார்கள். உண்மையில் இவர்கள் சொல்வது தீபத் தூண் அல்ல. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நில அளவைக்காக வைத்த தூணைத்தான் ‘தீபத் தூண்’ என்கிறார்கள்.
மலையில் இருக்கும் சிக்கந்தர் தர்க்காவுக்கும் முருகர் கோவிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த தர்க்காவுக்கு அருகில் தான் பிரிட்டிஷ் ஆட்சி காலத்து நில அளவைத் தூண் இருக்கிறது. தர்க்காவுக்கு அருகில் இருக்கும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும், அதனால் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம்.
பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் கடந்த 3 ஆம் தேதியன்று ஏற்றப்பட்டு விட்டது. ‘அரசு தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை’ என்பது மிகப்பெரிய பொய்யாகும். தீபம் ஏற்றப்பட்டு விட்டது.
கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. பல்லாண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் என்று கேட்பது தான் பிரச்சினையாக உள்ளது.
1996 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘’உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் இடம் தான் பாரம்பர்யமானது’’ என்று சொல்லப்பட்டு உள்ளது. 2014 உயர்நீதிமன்ற அமர்விடம் கேட்ட ஆதாரங்கள் தராததால் மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 7.12.2017 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டதோ அதன்படி தான் அரசு செயல்பட்டு வருகிறது.‘தர்கா அருகில் உள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான ஆகம ஆதாரம் ஏதும் இல்லை. அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கத் தேவையில்லை’என்று தீர்ப்பு வந்தது.
இப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் கூட இவர்களது கலவர நோக்கத்துக்கு தடை விதித்துவிட்டார்கள் நீதிபதிகள். ‘’கோயில் நிர்வாகம் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும். பொதுமக்கள், அரசியல் கட்சியினரை அனுமதிக்கக் கூடாது.” என்று சொல்லி இருக்கிறார்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரனும், கே.கே.ராமகிருஷ்ணனும். இப்படி அமைதியாக நடப்பதை இங்குள்ள கும்பல் விரும்பாது.
தமிழ்நாட்டின் கோவில்கள் அமைதியாக இருக்கின்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வணங்கி வருகிறார்கள். இந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்துக் கோவில்களும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. எந்தக் கோவில் திருவிழாக்களிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. உண்மையான பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக இதனை முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்தி வருகிறார்கள். இதில் தீயைப் போட்டு அமைதியைக் குலைக்க யார் நினைத்தாலும், அதனை தமிழ்நாட்டு மக்களே விரும்ப மாட்டார்கள்.








