Tamilnadu

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை: இது அரசியல் யாத்திரை.. வழிபாட்டுக்கானதல்ல - டிஜிபி திட்டவட்டம்!

பா.ஜ.கவின் வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், யாத்திரையில் எத்தனை பேர் பங்கேற்பர்? எத்தனை வாகனங்கள் கலந்து கொள்ளும் என்பன உள்ளிட்ட விவரங்களுடன் காவல்துறைக்கு விண்ணப்பம் அளிக்க பா.ஜ.க தரப்புக்கு அறிவுறுத்தியது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் டி.ஜி.பி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்து வாதிட்டார்.

அப்போது அவர், கடந்த 6, 8 மற்றும் 9ம் தேதிகளில் பா.ஜ.கவினர் திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டதாகவும், அதில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை எனவும் , முகக்கவசம் அணியவில்லை எனவும், பா.ஜ.க தலைவர் முருகன் முறையாக முகக்கவசம் அணியவில்லை எனவும் டி.ஜி.பி அறிக்கையை மேற்கோள்காட்டி வாதிட்டார்.

மேலும், வேல் யாத்திரை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளானதாகவும், இந்த யாத்திரையில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இது கோவில் யாத்திரை அல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை எனக் கூறிய அவர், மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க பொறுப்புடன் செயல்படாமல், சட்டத்தின் ஆட்சியை பின்பற்றாமல் செயல்பட்டுள்ளதாகவும், 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வதாக கூறிவிட்டு, அதை மீறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கட்சி (பா.ஜ.க) தொண்டர்களை கட்டுப்படுத்த இயலவில்லை என்றால் காவல் துறையினர் மீது தான் குற்றம் கூறப்படும் என நீதிபதி தெரிவித்தார். அப்போது, மற்ற போராட்டங்கள் சட்டவிரோதமானது. பா.ஜ.க கூறியபடி 18 வாகனங்கள் மட்டும் செல்கிறது என பா.ஜ. தரப்பு கூறியது.

அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது. மூன்று நாட்களாக கட்சி தலைவர்கள் கூடியுள்ளனர் எனக்கூறிய நீதிபதி, வேல் ஒரு ஆயுதம். ஆயுத சட்டப்படி அது தடை செய்யப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

கடவுள் முருகன் வேல் வைத்திருந்தால் அது குற்றமா? பா.ஜ.க தலைவர் வைத்திருப்பது மரத்தால் ஆனது. அது தலைவரிடம் தான் உள்ளது. தொண்டர்களிடம் வழங்கப்பட மாட்டாது. அரசியல் மேடைகளில் வாள் பரிசு வழங்கப்படுவது வழக்கம். தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து அமைதியாக யாத்திரை செல்ல அனுமதிக்க வேண்டும். 50-60 தொண்டர்கள் தான் வருகின்றனர் என பா.ஜ.க தரப்பு கூறியது.

Also Read: முருகன் கோவிலே இல்லாத பகுதிகளில் வேல் யாத்திரை நடத்துவது ஏன்? - பாஜகவுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி!

கட்சித் தலைவர் தொண்டர்களை கட்டுப்படுத்துகிறாரா? இறுதியில் காவல் துறையினர் அத்துமீறியதாக குற்றம் சாட்டப்படுகிறது. எல்லாம் அடுத்த மே மாதத்தை மையப்படுத்தி தான் நடக்கிறது என நீதிபதிகள் எனக் கூறினார்கள்.

அதனையடுத்து, 38 கோவில்களுக்கு 18 வாகனங்களில் 30 பேர் யாத்திரை செல்ல அனுமதி கோரி நவம்பர் 9 ம் தேதி விண்ணப்பித்தோம். என்ன நிபந்தனை வேண்டுமானாலும் விதிக்கலாம். 65 வயதுக்கு மேலானவர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனக் கூறியிருக்கிறோம் எனக் குறிப்பிட்டு பா.ஜ.க தரப்பு வாதிட்டது.

அக்டோபர் 15ம் தேதிக்கு பின் வழிபாட்டு தலங்களில் 100 பேருக்கு மேல் கூட மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், மாநில அரசு நவம்பர் 16க்கு பின் கூடலாம் எனக் கூறிய மத்திய அரசு தரப்பு பேரிடர் மேலாண்மை சட்டப்படி விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் குறிப்பிட்டது.

யாத்திரைக்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.க்கள் அல்லது காவல் ஆணையரை அணுக டி.ஜி.பி அறிவுறுத்தியுள்ளார். 9ம் தேதி அளித்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. விரிவான காரணங்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மனுதாரர் கட்சி நடத்திய யாத்திரையில் விதிகள் மீறப்பட்டுள்ளன என தமிழக அரசு கூறியது.

தேவர் ஜெயந்தி அன்று அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளன. விதிகளை அனைவருக்கும் பொதுவாக அமல்படுத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காக இதுபோல செயல்பட்டால் அதிகாரிகள்தான் சிக்கலில் சிக்கப் போகிறார்கள். அரசு தலைமையில் இருப்பவர்கள் அல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், நவம்பர் 30 வரை யாத்திரை தடை செய்யப்பட்டுள்ளது. அரசாணையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும். கோவிலுக்கு செல்ல அனுமதி கோரவில்லை. கோவிலுக்கு தனி நபராக செல்ல எந்த தடையும் இல்லை. ஊர்வலத்துக்குதான் அனுமதி கோரப்பட்டுள்ளது. எந்த போராட்டத்துக்கும் அனுமதிக்கவில்லை என தமிழக அரசு கூறியது.

நவம்பர் 16 வரை கூட்டம் கூட தடை விதித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு கட்சியினர் யாத்திரை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கோவிட் விதிகளை பின்பற்றவில்லை. கடுமையாக அமல்படுத்தும் போது மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அவர்களும் நடவடிக்கை எடுப்பதில்லை. கொரோனா விதிகளை கண்டிப்புடன் அனைத்து கட்சி கூட்டங்கள், மத கூட்டங்களுக்கும் அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்த அரசுக்கு உத்தரவிட்டது.

ஓசூரில் யாத்திரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவிக்கப்பட்டதோடு ஓசூர் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர பா.ஜ.வுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து இடைக்கால உத்தரவு கோரிய மனுக்களை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Also Read: பாஜக ஒரு வன்முறை கட்சி.. சட்டத்தை மீறி வேல் யாத்திரை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை பாயாதது ஏன்? -முத்தரசன்