Tamilnadu
“ஆளும் கட்சி முக்கிய புள்ளிகள் - அரசு அதிகாரிகளின் உதவியுடன் மணல் திருட்டு” : சிவகங்கை விவசாயிகள் வேதனை!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இளையான்குடி, திருப்புவனம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் குவாரிகள் அமைக்க அதிகாரிகள் அனுமதிக் கொடுத்துள்ளனர். அடுத்தடுத்த மாதங்களில் மழைக்காலம் தொடங்கும் நிலையில் குவாரிகளுக்கு அனுமதிக்கொடுக்க கூடாது என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத அதிகாரிகள் குவாரிகள் நடத்திக்கொள்ள அனுமதிக்கொடுத்ததன் விளைவாக, ஆற்றுப்பகுதியில் உள்ள மணல்களை விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக எடுக்க துவங்கியுள்ளனர்.
இதனைத் தட்டிக்கேட்க செல்லும் அப்பகுதி மக்களை மணல் கொள்ளையர்கள் அடியாட்டகளை வைத்து விரட்டி அடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாது இந்த மணல் திருட்டில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் இருப்பதால் அதிகாரிகள், போலிஸார் இதனைக் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் துணிந்த மணல் மாபிய கும்பல்கள் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தற்போது பகலிலேயே மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், “தமிழகத்தில் வைகை ஆற்று மணலுக்கு தான் எப்போது மவுசு அதிகம். அதனால் ஒரு லோடு மணல் 70 முதல் 80 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும்.
தற்போது ஊரடங்கு காரணமாக அரசு அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு வைகை ஆற்றை ஒட்டியுள்ள பட்டா பகுதியில் அனுமதி வாங்கிவிட்டு, பல அடிக்கு மணல்களை எடுத்து வருகின்றனர்.
இதில், சவுடு மணல், கிராவல், உபரிமன் எனப் பல வகைகளில், 50 அடி முதல் 70 அடி வரை மணல் அள்ளி, மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து மட்டும் தினமும் ஆயிரம் லாரிகள் மூலம் மணல் எடுத்து பல கோடிகளைக் குவித்துள்ளனர் மணல் கொள்ளையர்கள்.
இந்தப் பகுதியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளும் போலிஸாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆளும் கட்சியினர் துணையில்லாமல் இது எப்படி சாத்தியம். உரிய வகையில் விசாரணை நடத்தினால் ஆளும் கட்சி முக்கிய புள்ளிகள் பலர் சிக்குவார்கள். எனவே அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!