தமிழ்நாடு

“போலிஸ் உதவியுடன் மணல் திருட்டு - தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல்” : ஒரத்தநாட்டில் நடந்த கொடூரம்!

ஒரத்தநாடு பகுதியில் மணல் திருட்டை தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே சின்னமங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கமுத்து. நேற்று நள்ளிரவு காட்டாற்றில் சில மர்ம நபர்கள் யாருக்கும் தெரியாமல் மணல் திருட்டில் ஈடுபட்டனர். இதனைக் கண்ட விவசாயி தங்கமுத்து அங்கிருந்த புதரில் மறைந்தபடி தன் செல்போனில் வீடியோவாக படம் எடுத்துள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த தங்கமுத்துவை மண் வெட்டியால் தாக்கி கடப்பாரையால் அடித்து விரட்டியுள்ளனர். இதனால் தப்பி ஓடிய தங்கமுத்து காயமடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தகவலறிந்து அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஒத்தநாடு டி.எஸ்.பி தங்கமுத்துவிடம் விசாரணை நடத்தினார். அப்போது தங்கமுத்து டி.எஸ்.பி-யிடம் அளித்த புகாரில், “என் வயலுக்கு அருகில் உள்ள சமுத்திரம் என்ற காட்டாற்றில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஜெயக்குமார், ரஞ்சித்குமார் மற்றும் ரவீந்திரன் ஆகிய மூன்று பேரும் அடிக்கடி மணல் திருட்டில் ஈடுபடுவது ஊரில் உள்ள அனைவருக்குமே தெரியும்.

தங்கமுத்து
தங்கமுத்து

சம்பவம் நடைபெற்ற அன்று மூன்று பேரும் லாரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். இதனைப் பார்த்த நான் ஆதாரத்திற்காக எனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து மணல் கொள்ளையைத் தடுக்க நினைத்தேன். அப்போது நான் வீடியோ எடுப்பதை 3 பேரும் பார்த்து என்னைத் தாக்கினார்கள்.

அப்போது “திருவோணம் காவல்நிலையைத்தில் காவலராக பணியாற்றும் சரவணன் என்பவரின் துணையுடன் தான் இந்த வேலையை செய்கிறோம். நீ முடிந்தால் என்ன வேண்டுமானாலும் செய். யாரிடம் வேண்டுமானாலும் போய்ச் சொல். யாரும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது” எனச் சொல்லி கையில் இருந்த மண் வெட்டி, கடப்பாரைக் கொண்டு தாக்கினர்.

நான் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயக்குமார், ரஞ்சித்குமார், ரவீந்திரன் மற்றும் காவலர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார். இந்நிலையில் இதுதொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் சம்பவ இடத்தில் போலிஸ் துணையுடன் மணல் திருட்டு நடப்பதாக தங்கமுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட குரல்பதிவு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories