
உலக அளவில் பரவி இருக்கும் தமிழ்ச் சமூகத்தினர் தங்களது நெஞ்சில் ஏந்திருக்கும் தமிழ்ச் சுடரை யாராலும், எவராலும் அணைத்துவிடவோ, அணைக்க நினைத்துவிடவோ முடியாது என்பதை நூற்றாண்டுகள் கடந்து உரக்கச் சொல்லி வருகிற இனமாக தமிழ் இனம் வீரிட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழ் இனம் என்பது வெறும் மொழி உரிமை கோரும் இனமாக மட்டும் இல்லாமல் சமூக ஒற்றுமை, பொதுவுடைமை, மதச்சார்பின்மை, சுயமரியாதை உள்ளிட்ட கருத்தியல்களை ஆழமாக உணர்ந்து, தன்னுரிமையை என்றும் கைவிடாத இனமாகவும் செயல்பட்டு வருகிறது.
அப்படியான நிலையில், இந்திய ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படும் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு என்றும் வழிவிடாமல், தமிழ் மொழியைக் காத்து வருகிற நடவடிக்கையை தமிழ்ச் சமூகம் என்றும் தளராது தொடர்ந்து வருகிறது.
அப்படியான தொடர்ச்சியாகதான், மே 17 இயக்கத்தின் சார்பில் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டங்கள், சென்னையில் உள்ள தொடர்வண்டி நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த போராட்டங்கள் தமிழ்த் ‘தீ’ பரவவும், இந்தித் திணிப்பை ஒடுக்கவும் உந்துதலாக இருப்பது தவிர்க்க முடியாத உண்மை என்றாலும், தமிழர்கள் என்றும் தங்களது இன்னுயிருக்கு மதிப்பளித்து, தமிழ்த் ’தீ’-யை பரவ செய்ய வேண்டும். தமிழ்த் தீ பரவுவதை தமிழர்கள் கண்டு பெருமைக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை மீண்டும் அழுத்தமாக எடுத்துரைத்திருக்கிறது.
காரணம், மே 17 இயக்கத்தின் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின் போது, அந்த இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் என்பவர், தமது எழுச்சிமிகு உணர்ச்சியால் தன்னுயிர் நலன் பாராது இரயிலின் முன்னே ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என முழக்கமிட்டவாறே தண்டவாளத்தில் இறங்கி தன்னையே கொடுக்க முனைந்துவிட்டார். இதனையடுத்து அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வரும் சிவா திலீபனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு, “தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே…. உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல!
இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் உணர்ச்சிப் பெருக்கால் ரயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சகோதரர் சிவா திலீபன் அவர்களையும், உடனிருக்கும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி அவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
அப்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சகோதரர் சிவா திலீபன் நலம்பெற வேண்டும் எண்ணமும், “பிள்ளைகளைப் பலிகொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்” என்று மொழிப்போரின்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதும் ஒருசேர என்னுள் எழுந்தது.
இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!
தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அரசியல் களத்தில் ஒற்றுமையுடன் முறியடிப்போம். உணர்ச்சிகள் நம் அறிவாற்றலை ஆட்கொள்ள விடாமல், சிந்தித்துச் செயல்படுவோம்!
எனவே, நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் சிவா திலீபன் அவர்கள் நலம் பெற்றுத் திரும்ப அனைத்துச் சிறப்பு கவனிப்புகளையும் செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.”






