Sports

சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!

இந்திய கிரிக்கெட் அணிக்காக வெறும் 15 வயது 3 மாதம் 7 நாட்களில் சர்வதேச அரங்கில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, இந்தியாவின் இளம் வயது சர்வதேச வீரர் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக அவர் தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் சமஸ்திபூரைச் சேர்ந்த வைபவ், 2026 ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்த அவர், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் அறிமுக வாய்ப்பைப் பெற்றார்.

இந்திய வீரர் திலக் வர்மா, சூர்யவன்ஷிக்கு அறிமுகத் தொப்பியை வழங்கியபோது, சக வீரர்கள் அனைவரும் அவரை கைதட்டி வரவேற்றனர்.

இந்திய அணியின் மூத்த வீரர் ஷ்ரேயஸ் ஐயர், வைபவின் திறமையைப் பாராட்டி பேசும் போது, “கடந்த சில மாதங்களாக அவர் விளையாடும் விதத்தை பார்த்திருக்கிறோம். அணியில் இடம் பெற அவர் முழுமையாக தகுதியானவர். எந்த அழுத்தத்தையும் உணராமல் தன்னம்பிக்கையுடன் விளையாடும் குணம் அவரிடம் உள்ளது. நெட்ஸிலும் பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்தும் விதம் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது” என்று கூறினார்.

வைபவ் ஏற்கனவே அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அணியில் இருந்தபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், இன்று (ஜூலை 04) மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் அவருக்கு இந்திய அணிக்காக அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

15 வயது 3 மாதம் 7 நாட்களில் இந்திய அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் இந்த சாதனை இந்திய மகளிர் அணியின் ஷெஃபாலி வர்மா வசம் இருந்தது. அவர் 2019-ஆம் ஆண்டு 15 வயது 239 நாட்களில் இந்திய அணிக்காக அறிமுகமானார். ஆண்கள் கிரிக்கெட்டில், 16 வயதில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையையும் வைபவ் முறியடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் இளம் வயதில் அறிமுகமான வீரர்களில் பார்த்திவ் பட்டேல் (17 வயது 152 நாட்கள்), ஹர்பஜன் சிங் (17 வயது 288 நாட்கள்), யுவராஜ் சிங் (18 வயது 124 நாட்கள்) ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், அவர்களை விட மிகவும் இளம் வயதில் தேசிய அணிக்காக களமிறங்கிய வீரராக தற்போது வைபவ் சூர்யவன்ஷி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதுவரை இந்தியாவுக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்களின் பட்டியல் படி, டெஸ்ட் போட்டிகளில் மிகவும் இளம் வயதில் இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கர் – 16 வயது 205 நாட்களில் களமிறங்கினார். பியூஷ் சாவ்லா 17 வயது 75 நாட்களிலும், லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் 17 வயது 118 நாட்களிலும் பார்த்திவ் பட்டேல் 17 வயது 152 நாட்களிலும் களமிறங்கியுள்ளார்.

ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 16 வயது 238 நாட்களில் இந்திய அணிக்காக களமிறங்கினார். மனிந்தர் சிங் 17 வயது 222 நாட்களிலும் ஹர்பஜன் சிங் 17 வயது 288 நாட்களிலும், பார்த்திவ் பட்டேல் 17 வயது 301 நாட்களிலும் களமிறங்கியுள்ளனர்.

டி20 சர்வதேச போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் 18 வயது 80 நாட்களில் இந்திய அணிக்காக களமிறங்கியதே இளம் வயது வீரர் என்ற சாதனையாக இருந்தது. இன்று (ஜூலை 04) இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கியதன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி 15 வயது 99 நாட்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ரிஷப் பந்த் 19 வயது 120 நாட்களிலும், இஷாந்த் ஷர்மா 19 வயது 152 நாட்களிலும் களமிறங்கியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாகக் கருதப்படும் வைபவ் சூர்யவன்ஷி, தனது திறமையை சர்வதேச அரங்கிலும் நிரூபிப்பாரா என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Also Read: “2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!