Sports
“2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!
2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான தகுதிச்சுற்று (Qualification Pathway) நடைமுறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் தலா 6 அணிகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும். இதில் 5 அணிகள் ஐசிசி தொடர்கள் மற்றும் டி20 சர்வதேச தரவரிசை (T20I Rankings) அடிப்படையில் தகுதி பெறும். கடைசி ஒரு இடம் 2027-ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்படவுள்ள ICC Olympics Qualifier தொடரின் மூலம் நிர்ணயிக்கப்படும்.
தற்போது நடைபெற்று வரும் 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முடிவில், பெண்கள் ஒலிம்பிக் போட்டிக்கான முதல் 4 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் ஒரு அணி மட்டுமே தகுதி பெறும் விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டியை நடத்தும் அமெரிக்கா, 2026 ஜூன் 30 முதல் டிசம்பர் 31 வரை ஏதேனும் ஒரு கட்டத்தில் ஆண்கள் அல்லது பெண்கள் டி20 சர்வதேச தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் இருந்தால், இரு பிரிவுகளிலும் தானாகவே ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும்.
பெண்கள் பிரிவில் அமெரிக்கா இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யத் தவறினால், 2027 மார்ச் 1-ஆம் தேதி வெளியிடப்படும் ஐசிசி மகளிர் டி20 தரவரிசையில் இன்னும் தகுதி பெறாத அணிகளில் அதிக தரவரிசை பெற்ற அணிக்கு அந்த இடம் வழங்கப்படும் எனவும், ஆண்கள் பிரிவில் இந்த இடம், 2026 டிசம்பர் 31-ஆம் தேதியிலான தரவரிசை அடிப்படையில் அடுத்த தகுதியான அணிக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் பிரிவில் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓஷியானியா கண்டங்களைச் சேர்ந்த தரவரிசையில் முன்னைலையில் உள்ள தலா ஒரு அணிக்கு, 2026 டிசம்பர் 31-ஆம் தேதியிலான ஐசிசி ஆண்கள் டி20 தரவரிசை அடிப்படையில் நேரடி தகுதி வழங்கப்பட உள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் தலா 8 அணிகள் இந்த தகுதிச்சுற்றில் பங்கேற்கும். ஏற்கனவே தகுதி பெற்ற அணிகளைத் தவிர்த்து, டி20 சர்வதேச தரவரிசையில் அடுத்த உயர்ந்த இடங்களில் உள்ள 7 அணிகள் இதில் இடம்பிடிக்கும். இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ஒலிம்பிக்கிற்கான கடைசி இடத்தை கைப்பற்றும்.
வெஸ்ட் இண்டீஸ் அணி பல தனித்தனி நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பாக இருப்பதால், அது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் தேசிய ஒலிம்பிக் கமிட்டியாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாக ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது.
ஆனால், ஆண்கள் அல்லது பெண்கள் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 2026 டிசம்பர் 31-ஆம் தேதியிலான தரவரிசையில் இன்னும் தகுதி பெறாத முதல் 8 அணிகளுக்குள் இடம்பெற்றால், கரீபியன் நாடுகளுக்குள் தனி தகுதிப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் தேசிய ஒலிம்பிக் கமிட்டி அணியே ICC Olympics Qualifier-ல் பங்கேற்கும்.
ஒவ்வொரு அணியும் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவிக்கும். 6 அணிகள் தலா 3 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற இரு அணிகளுடன் விளையாடுவதுடன், எதிர் குழுவிலிருந்து வேறுபட்ட நிலைகளில் உள்ள இரண்டு அணிகளையும் எதிர்கொள்ளும்.
லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் மோதும். 3 மற்றும் 4-வது இடங்களைப் பெறும் அணிகள் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும்.
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் சேர்த்து மொத்தம் 28 போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவின் பொமோனா நகரில் கிரிக்கெட்டுக்காக புதிதாக அமைக்கப்படும் சிறப்பு மைதானத்தில் நடைபெறும்.
2027-ஆம் ஆண்டு நடைபெறும் ICC Olympics Qualifier தொடரின் தேதி மற்றும் நடத்தும் நாடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
Also Read
-
4 முறை சாம்பியனை வீட்டிற்கு அனுப்பிய குட்டி நாடு - ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே கொடுத்த மாஸ் வெற்றி!
-
“தூக்கில் தொங்கிய படி.. காதல் ஜோடி சடலங்கள் மீட்பு.. ஆணவக் கொ*லையா?” - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்!
-
“ஏ.டி.எம் கார்டு மூலம் மாத்திரைப் பொடி.. கில்லி சரத்-ஐ என்ன செய்யப்போகிறார் யோக்கியர் விஜய்” - முரசொலி!
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!