Sports

”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”

ஐபிஎல் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஆலமரம் இல்லாமல், ஆனால் அந்த ஆலமரத்தின் வேரே நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனிதான். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக CSK அணியுடன் பயணித்து வருகிறார் அவர். ஆனால், சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்ற போதிலும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடி தான் வருகிறார்.

2 ஆண்டு தடைகளுக்கு பிறகு 2018ம் ஆண்டு CSK அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியிருந்தது. அதிலும் பல்வேறு விமர்சனங்கள் அப்போதிருந்த அணி மீது இருந்தாலும் கூட தோனி அதனை திறம்பட நிர்வகித்து கோப்பையை வென்று கொடுத்தார்.

அதன்பிறகு, 2021 மற்றும் 2023ம் ஆண்டுகளிலும் CSK அணி கோப்பையை கைப்பற்றியிருந்தது. 2023ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை CSK அணி கோப்பையையும் வெல்லவில்லை. அதேபோல், பிளே ஆப் கூட செல்ல முடியாமல் CSK அணி ஒரு சரியான தலைமை இல்லாமல் CSK அணி தடுமாறுகிறதா என்ற கேள்வி வந்தபோது அதற்கும் பதில் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் கடந்தாண்டு நடைபெற்ற டிரேடிங் முறையில் CSK அணிக்காக நீண்டகாலமாக ஆடி வந்த ஜடேஜாவுக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் வந்தார். இவர் வந்ததே தோனிக்கு மாற்றாகத்தான் அவர் விரைவில் ஒய்வு பெற உள்ளார் என செய்திகள் வந்தன. ஆனால், எம்.எஸ்.தோனி என்னுடைய கடைசி ஆட்டம் சென்னையில் தான் இருக்கும் என கூறியதையும் ரசிகர்கள் மறக்கவில்லை.

ஆனால், இந்த ஆண்டு நிலமையோ வேறுவிதமாக அமைந்தது. முதல் 2 வாரங்கள் மட்டுமே தோனி விளையாட மாட்டார் என முதலில் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், கிட்டத்தட்ட 13 போட்டிகள் வரை எம்.எஸ்.தோனி களமிறங்கவில்லை. முக்கியமாக அவர் போட்டி நடைபெறும்போது மைதானத்திற்கு கூட வரவில்லை என்பது ரசிகர்களை மேலும் கவலையடையச் செய்தது.

நடப்பு ஐபிஎல் தொடரிலும் CSK அணியின் பிளே ஆப் கனவு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்றுடன் (மே 14) சென்னை அணியின் கடைசி போட்டியும் முடிவடைய உள்ளது. கடைசி போட்டியிலும் தோனி பங்கேற்பது சிரமம் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தோனி தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வயது ஒரு காரணமாக இருந்தாலும் தோனி இவ்வளவு அமைதியாகவும் விரக்தியுடனும் சென்னை அணியுடன் இருக்கும்போது காணப்பட்டதில்லை என பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளது.

தோனி மைதானத்திற்கு வராததற்கு முக்கிய காரணம், கேமிராக்கள் அனைத்தும் ரசிகர்கள் அனைவரும் தோனியை ஃபோகஸ் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதனால், களத்தில் உள்ள வீரர்களுக்கு அழுத்தம் அதிகமாகிவிடும் என்பதால் அவர் களத்திற்கு வரவில்லை என கூறப்பட்டது.

அண்மையில் நடந்த SRH அணியுடனான போட்டி சென்னையில் நடைபெற்றதாலும், இதனுடன் CSK அணிக்கு சொந்த மைதானத்தில் போட்டிகள் நிறைவடைவதாலும். வீரர்களுடன் குழுப்புகைப்படம் எடுக்க மைதானத்திற்குள் தோனி வந்தார். அப்போது ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் CSK வீரர் ரவிச்சந்திர அஸ்வின், ”தோனி இவ்வாறு அணியில் இருப்பவர் இல்லை. அணிக்குள் ஏதோ குழப்பம் நிகழுவதுபோல் உள்ளது. CSK முன்னாள் உரிமையாளர் சீனிவாசன் இருந்திருந்தால் தோனி இவ்வாறு இருந்திருப்பாரா என தெரியவில்லை” என தனது சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

இதுதான் தற்போது மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் தோனி அவ்வளவு சீக்கிரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு பிரியமாட்டார். அவ்வாறு நடக்காது என ரசிகர்கள் ஒருபுறம் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

எம்.எஸ்.தோனி எதையுமே தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்தகூடியவர் என்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் விவகாரத்தில் கடினமான முடிவுகளை உடனடியாக எடுக்க மாட்டார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

Also Read: “IND vs AFG Tour.. டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.. புது வீரர்களுடன் அசத்தல் Squad”