Sports

உலக அணியுடனான போட்டிக்கு ஏற்பாடு செய்யுங்கள்.. BCCI-க்கு கோரிக்கை விடுத்த இந்திய அரசு! பின்னணி என்ன?

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. அதைத் தொடர்ந்து, வெஸ்ட் இன்டீசிற்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இதன் பின்னர் ஆகஸ்ட் 18 முதல் 22 ஆம் தேதி வரை ஜிம்பாப்வேற்குச் சுற்றுப்பயணம் செய்து அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதன் பின்னர் ஆகஸ்ட் 27 இலங்கையில் தொடங்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

இதில் வெஸ்ட் இன்டீசிற்குச் சுற்றுப்பயணம் செய்யும் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜிம்பாப்வேற்கு இளம் வீரர்கள் கொண்ட அணியே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் ஆசிய கோப்பை தொடரில் வலிமையான இந்திய அணியே பங்கேற்கும்.

இந்த நிலையில் இந்தியாவில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய அரசு பிசிசிஐ-க்கு ஒரு புதிய கோரிக்கை ஒன்றை விதித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 22ஆம் தேதி உலக லெவன் அணியோடு இந்திய அணி மோதும் ஒரு போட்டியை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி போட்டி நடைபெற்றால் இந்திய அணிக்கு எதிராக உலகில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட உலகஅணி ஒன்று விளையாடும். இதன் மூலம் இந்திய சுதந்திர தினம் உலக அளவில் கவனம் பெரும் என இந்திய அரசு எதிர்பார்க்கிறது.

ஆனால், ஆகஸ்ட் 22 ஆம் தேதி இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும், அதே நேரம் அடுத்த 5 நாளில் ஆசிய கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இத்தனை நெருக்கடிக்கு மத்தியில் உலகஅணியுடன் ஒரு போட்டிக்கு இந்திய அணி தயாராகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதன் காரணமாக இந்திய அரசின் கோரிக்கைக்கு பிசிசிஐ ஒப்புக்கொள்வது சந்தேகம்தான் என்றும், வேறு நாளில் வேண்டுமானால் இந்த போட்டி நடக்கலாம் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Also Read: 10 மாத குழந்தைக்கு ரயில்வே வேலை.. இந்திய வரலாற்றில் முதல் முறை.. பின்னணி என்ன?