Politics
“அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேகதாது அணை முயற்சியைத் தடுப்போம்!” : உதயநிதி!
மேகதாது அணை குறித்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை.
பேரவைத் தலைவர் அவர்களே, முதலமைச்சர் அவர்களே, அமைச்சர் பெருமக்களே, சட்டமன்ற உறுப்பினர்களே! நம் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க, முயற்சிக்கின்ற மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதுதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.
பேரவைத் தலைவர் அவர்களே, முதலமைச்சர் அவர்களே, அமைச்சர் பெருமக்களே, சட்டமன்ற உறுப்பினர்களே! நம் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க, முயற்சிக்கின்ற மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதுதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.
அனுமதிக்கக் கூடாது காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமை பறிபோக நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. காவிரி நடுவர் மன்றம், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட அனைத்திற்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கழக அரசு எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்தான் முழுகாரணம். அதை, இந்த அவையில் இருக்கின்ற மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள்.
நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் நடத்தித்தான், நாம் காவிரியின் மீதான நம் உரிமையைப் போராடிப் பெற்றிருக்கிறோம். ஆனால், அதனைப் பறிக்கும் வகையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த முயற்சியை அவர்கள் எடுத்தபோது, அந்தச் சமயத்தில், எங்கள் கூட்டணியில் இருந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சி செய்தபோதிலும், அதனைப் பற்றிக் கவலைப்படாமல், மேகதாது அணைத் திட்டத்தை எங்களுடைய தலைவர், அப்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
இன்றைக்கும் நம் முதலமைச்சர் அவர்கள் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக இந்த தீர்மானத்தை, இன்றைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, நாங்கள் மனதார வரவேற்கிறோம்.
மேகதாது அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசிற்கு எதிராக, எங்கள் தலைவர், எங்கள் அரசு எடுத்த நடவடிக்கைகள் சிலவற்றை ஆளுங்கட்சிக்கும், முதலமைச்சருக்கும், அவைக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். தீர்மானம் நிறைவேற்றினோம் 2021-ஆம் ஆண்டு மே மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்.
ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே, அதாவது ஜூன் 17, 2021 அன்று `மேகதாது அணை கட்ட அனுமதியளிக்கக் கூடாது’ என்று எங்கள் தலைவர் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினார். பிறகு, அதே கருத்தை வலியுறுத்தி, ஜூலை மாதத்தில், ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சருக்கும் எங்கள் தலைவர் அவர்கள் ஒரு கடிதம் எழுதினார்கள்.
இதனையடுத்து, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, `மேகதாது அணையை எந்தக் காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது’ என்ற தீர்மானத்தையும் நாங்கள் நிறைவேற்றினோம். ஜூலை மாதத்தில் அதையே ஒன்றிய அமைச்சரிடமும் நேரில் வலியுறுத்தினோம். கடந்த 2022-2023 நிதியாண்டில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த விஷயம் தெரிந்ததும், இதே அவையில் அதைக் கண்டித்து, அரசின் தனித் தீர்மானத்தையும் எங்கள் அரசு அன்று நிறைவேற்றியது.
அன்று ``தமிழ்நாட்டின் உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்” என்று எங்கள் தலைவர் பேசினார்கள். திருப்பி அனுப்பப்பட்டது மேகதாது அணை கட்டுவது குறித்தான விரிவான திட்ட அறிக்கையை விவாதிக்க வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் வைத்த அஜெண்டாவை நீக்க, எங்கள் தலைவர் தலைமையிலான அரசு அன்றைக்குக் கடுமையாக வலியுறுத்தியது.
இதற்காக, அன்றைய முதலமைச்சரான எங்கள் தலைவர் அவர்கள் ஜூலை மாதம், 2022-ஆம் ஆண்டு பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதினார். அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சிக் குழுவினர், ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள்.
இப்படி, நமது தொடர் எதிர்ப்பின் காரணமாக, மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report), பிப்ரவரி மாதம் மத்திய நீர்வள ஆணையத்திற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. மேலும், கழக அரசின் எதிர்ப்பால், மேகதாது அணையின் நிபந்தனை விவரங்களை (Terms of Reference-ஐ) தன்னுடைய `திட்டப் பட்டியலில்’ இருந்து, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகமும் நீக்கியது.
அதுமட்டுமில்லாமல், 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் எங்கள் அரசின் நீர்வளத்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவர் எழுதிய கடிதத்தில், `இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகத் தீர்வு எட்டப்பட்ட பிறகுதான், Terms of Reference அனுமதி பற்றி ஆலோசிக்கப்படும்’ என்று சொல்லியிருந்தார்.
கழக அரசும், எங்கள் தலைவரும் மேகதாது அணை தொடர்பாக, கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை’ (Detailed Project Report) சமர்ப்பிக்கவில்லை என்பதுதான் எங்கள் கழக அரசு இருந்த வரையிலான நிலை ஆகும். திராவிட முன்னேற்றக் கழக அரசும், எங்கள் தலைவரும் தைரியமாகத் தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பதிவு செய்ததால்தான் இது சாத்தியமானது என்பதை இந்த மாமன்றத்தில் மீண்டும் பதியவைக்க விரும்புகிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மத்திய நீர்வள ஆணையம் (Central Water Commission), 22-11-2018 தேதியிட்ட கடிதத்தின் மூலமாகக் கர்நாடக அரசுக்குச் சில முக்கியமான நிபந்தனைகளைத் தெரிவித்திருந்தது. அதில் முதலாவதாக, மேகதாது அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் நிபந்தனையற்ற அனுமதி எதுவும் கொடுக்கவில்லை. இரண்டாவதாக, அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரிப்பதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசு தெரிவிக்கும் பல்வேறு ஆட்சேபணைகளை அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.
மூன்றாவதாக, மத்திய மின்வாரிய ஆணையத்திடமும், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருக்கின்ற மத்திய நீர்வள ஆணையப் பிரிவிடமும் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். ஒரு புதிய விவாதம் இவை எல்லாவற்றிற்கும் மேலாக, `காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய’த்தின் (Cauvery Water Management Authority) முன் அனுமதியையும் பெற வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். எனவே, பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு இவற்றைல்லாம் ஒன்றிய அரசிடம் உறுதியாக எடுத்துப் பேசி, காவிரியில் நம் தமிழ்நாட்டின் உரிமையை நாம் அனைவரும் சேர்ந்து நிலைநாட்ட வேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயத்தை, இங்கு நான் பதியவைக்க விரும்புகிறேன். மேகதாது பிரச்சினை தொடர்பாக, கடந்த 13.11.2025 அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகு, 04.03.2026 அன்று அன்றைய முதலமைச்சரான எங்கள் தலைவர் அவர்களின் உத்தரவுப்படி, தமிழ்நாடு நீர்வளத்துறை அரசுச் செயலாளர் ஒன்றிய ஜல் சக்தி துறைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், `கர்நாடக மாநிலத்தின் மேகதாது அணை கட்டும் பிரச்சினை ஒரு புதிய விவாதம் (New Dispute) என்பதால், நதிநீர் தாவா சட்டம்-1956-ன் படி (The Inter-State River Water Disputes Act, 1956) அடிப்படையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்று ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தோம்.
ஆகவே, இந்த அரசு இப்போது கொண்டு வந்திருக்கின்ற தீர்மானத்தில், `மேகதாது அணை கட்டுவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு, மார்ச் 4, 2026 அன்று எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம்-1956, பிரிவு 4-ன் கீழ், அந்த அடிப்படையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது’ என்கிற திருத்தத்தைச் சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தடுத்து நிறுத்துவோம் கர்நாடகா மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க, சட்டரீதியாகவும், பிரதமர் மூலமாகவும் இந்த அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக துணைநிற்கும். மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம் என்று கூறி, இந்தத் தீர்மானத்துக்கு எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, அதே மாதிரி இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்காததால் டெல்டா விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து நடக்கவிருக்கின்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் (Cauvery Water Management Authority), இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நம் தரப்பு நியாயங்களையெல்லாம் எடுத்து வைத்து, நமக்குரிய நீரை விரைவாகப் பெற்றுத் தர வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக இந்த அவையில் கேட்டுக்கொள்கிறேன்.
இறுதியாக, எங்கள் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு முக்கியமான வேண்டுகோளையும் முதலமைச்சர் அவர்களுக்கு வைக்க விரும்புகிறேன். மிக முக்கியமான தீர்மானம் இன்று நாம் நிறைவேற்றுகின்ற இந்தத் தீர்மானம் மிக முக்கியமான தீர்மானம்.
இந்த தீர்மானத்தைக் கடிதம் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்குப் பதிலாக, தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, ஒன்றிய அரசிடம் கொடுத்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயல்பட இந்த அரசும் முன்வர வேண்டும் என்று எங்கள் தலைவரின் சார்பில் கேட்டுக்கொண்டு, தீர்மானத்தை முழுமனதாக ஆதரித்து அமைகிறேன்.
Also Read
-
“ஆளுநருக்கு இணக்கமாக செயல்படும் த.வெ.க அரசு : பேரவையில் சிவசங்கர் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!
-
“தன்னம்பிக்கையை விதைத்த திட்டத்தின் பெயரை மாற்றிய தற்குறி அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“த.வெ.க அரசு காப்பி பேஸ்ட் அரசு ; ஆளுநர் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” : உதயநிதி ஸ்டாலின் முழு பேட்டி!
-
திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் : த.வெ.க ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது!
-
வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 5 சவரன் நகை பறிப்பு: எடப்பாடியில் பரபரப்பு!