Politics

ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?

பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாகியுள்ளது.

இந்த வழக்கில் ஆதாரை ஆவணமாக ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஆதார் அட்டையை ஒரு ஆவணமாக ஏற்கக்கூடாது என்று பாஜக வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

மேலும், ஆதார் எண்ணை ஆவணமாக சட்டம் அங்கீகரித்துள்ள நிலையில் அதனை நிராகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது குறித்து இன்று உச்ச நீதிமன்றத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

அப்போது அதற்கு விளக்கமளித்த உச்சநீதிமன்றம், பீகார் வழக்கில் வழங்கப்படும் உத்தரவுகள் அனைத்து மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கும் பொருந்தும் என்றும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மற்ற மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தால் அதன் மீதும் கண்டிப்பாக விசாரணை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Also Read: வக்ஃபு சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை... இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்பு !