இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. வக்ஃபு நிலங்களை பறிக்கும் விதமாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டது என கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து இந்த சட்டத்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது ஒன்றிய அரசு மற்றும் எதிர்கட்சிகள் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.
மேலும் வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவின் பல்வேறு அம்சங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதன்படி, வக்ஃப் சொத்து என்று அரசு அதிகாரி முடிவு செய்தால் அதனை வக்ஃப் தீர்பாயத்திலும் பின்னர் உயர் நீதிமன்றத்திலும் முறையீடு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. 11 பேர் கொண்ட வக்ஃப் வாரியத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என்றும், 20 பேர் கொண்ட கவுன்சிலில் 4 பேருக்கு மேல் இசுலாமியர்கள் அல்லாதவர்களை நியமிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வக்ஃபுக்கு தானம் வழங்க 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல ‘வக்பு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.