திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், தேனி எம்.பி.யுமான தங்க தமிழ்ச்செல்வன் நேற்று (செப்.14) தேனியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் பேசியது வருமாறு :-
கடந்த ஜூலை 1 ஆம் தேதியன்று திமுக தலைவர், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பின் மூலம் திமுகவில் இதுவரை இரண்டரை கோடி பேர் இணைந்துள்ளனர். இது தொடர்பாக செப்.15 ஆம் தேதியன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17 ஆம் தேதியன்று கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா மாநாடு, மற்றும் மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டம், மக்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் காவல்துறை கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இது தவெக மட்டுமல்ல திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளுக்கும் சேர்த்து தான். திருச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதித்த நேரத்தை விட தாமதமாக வந்து தான் பரப்புரை செய்தார். அதற்காக அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட தாமதமாக வந்தார் என தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுக்கவில்லை. தவெக மீது திமுக அரசு எந்தவித அடக்குமுறையும் மேற்கொள்ளவில்லை.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்காததால் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதிப்பற்றாக்குறை உள்ளது. இந்த நிலையில்தான் வெளிநாட்டு பயணங்கள் மூலம் முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டும் தவெக தலைவர் விஜய், முதலமைச்சர் ஸ்டாலினின் சொல்லாத வாக்குறுதி திட்டங்களான காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண் போன்ற எண்ணற்ற திட்டங்கள் குறித்து ஏன் பேசுவதில்லை. இன்னும் 8 மாத காலம் இருக்கிறது. அதற்குள் விடுபட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
அரசியல் கட்சியினர் யாரையும் போட்டியாக கருதக்கூடாது. இறுதி எஜமானர்களான மக்கள் தான் யாரை ஆதரிக்க வேண்டும் என முடிவெடுப்பார்கள். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாததால் மீண்டும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஏன்? தீர்வு காணவில்லை. முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது தெரிந்தும், திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி வீண் குற்றச்சாட்டு சுமத்துகிறார். அதிமுக ஆட்சியில் 15 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது எனக் கூறி, கடந்த 2021-ல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து தோல்வியடைந்த பிறகும், தற்போது வரை அதே குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள்.
தவெக தலைவர் விஜய் நல்ல நடிகர், சினிமாவில் அதிக சம்பளம் வாங்கக்கூடியவர். அவருக்கு அதிக ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவரது ரசிகர்கள் மட்டும் வாக்களித்தால் விஜய் வெற்றி பெற முடியாது. அரசியலில் அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதெல்லாம் இல்லை. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் விஜய் என நான்கு அணிகளாக வரும் சட்டமன்றத் தேர்தல் களம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி போன்ற நிறுவனங்கள் பாதிப்படையும் என்பதற்காக தான் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவில்லை. ஜிஎஸ்டியை முற்றிலும் விலக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். ஆனால் ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒன்றிய அரசு அண்மையில் திருத்தம் கொண்டு வந்தது நாடகம். மக்கள் அதனை நம்ப மாட்டார்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் கண்ணியமிக்க தலைவர் என்று யாரும் இல்லை. அதிமுக உடைந்து விட்டது. இரட்டை இலை சின்னத்திற்கான மவுசு இல்லை. தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் யார்? முதலமைச்சர் யார் என்ற போட்டிதான் அங்கு நிலவுகிறது. எதிர்க்கட்சியிடம் ஒற்றுமையில்லை.
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, அவர் வகித்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து மட்டும் நீக்கம் செய்த எடப்பாடி பழனிசாமி, ஏன் அவரை கட்சியில் இருந்து முழுமையாக நீக்கவில்லை? எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திறமையானவர், துணிச்சலானவர் என்றால், அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், தனது கூட்டணி கட்சித் தலைவரான அமித்ஷாவை, செங்கோட்டையன் சந்தித்ததற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?
கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருப்பதால், தற்போது வரை பாஜகவிடம் அடிமையாக இருக்கிறார் பழனிசாமி.