Politics

பாலியல் வன்கொடுமை : முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை... நீதிமன்றம் அதிரடி !

கர்நாடகா மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் (JDS) எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். அதன்பின்னரும் அவரை தேர்தலில் போட்டியிட பாஜக அனுமதித்தது. பெண்களின் பாதுகாவலர்கள் நாங்கள் என்று சொல்லும் பா.ஜ.க எப்படி, இப்படி ஒருவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்தது? என்ற கேள்வியும் எழுந்தது.

இதையடுத்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரம் காட்டியது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை பெங்களூரு விமானநிலையத்தில் வைத்து சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு எம்எல்ஏ, எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு விவரம் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று தீர்ப்பு விவரத்தை நீதிமன்றம் வெளியிட்டது. அதன்படி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: "வெளிமாநிலத்தில் இருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை தமிழ்நாடு ஏற்காது" - அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!