Politics

“ஆளுநருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ தன்னிச்சையான அதிகாரம் இல்லை!” : தி இந்து நாளிதழ் திட்டவட்டம்!

இந்தியா என்கிற கூட்டாட்சி அமைப்புடைய நாட்டில், மாநிலங்களுக்கான சுயாட்சி உரிமைகளை பெற தமிழ்நாடு தனித்து நின்று போராடி, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

அப்படியான நடவடிக்கைகளில், முதன்மை நடவடிக்கையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசால் இயற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க தவிர்த்து வந்ததை கண்டித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பையும் பெற்றுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.

இதனால், மாநிலங்களுக்கான உரிமை அதிகரித்துள்ளது. ஆனால், அதனை ஏற்றுகொள்ள விரும்பாத ஒன்றிய பா.ஜ.க அரசின் தலைமைகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பல நிலைகளில் விமர்சித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான தி இந்து நாளிதழின் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்களின் தன்னிச்சையான மற்றும் ஜனநாயக விரோத அதிகாரங்கள் குறித்த நீண்டகால சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வாய்ப்பை ஒன்றிய அரசு தவறவிட்டுவிட்டது.

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவரின் அதிகாரங்கள் குறித்த அரசியலமைப்பின் நிலைப்பாட்டை கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அளித்த தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் காலக்கெடுவை குறிப்பிடவில்லை என்றாலும், ஒரு மசோதா ஒப்புதலுக்காக ஆளுநருக்கும் குடியரசுத் தலைவரும் அனுப்பட்டவுடன், அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட நியாயமான தீர்ப்பு இது. இந்தத் தீர்ப்பு நீண்டகால கேள்விகளுக்கு தெளிவான விடைகளை அளித்துள்ளது.

தற்போது, ஒன்றிய அரசு, அரசியல் சட்டப் பிரிவு 143-ன் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு குடியரசுத்தலைவர் கேட்டுள்ள கேள்விகள் மூலம், இவ்விவகாரத்தை மீண்டும் கிளப்பி உள்ளது. குறிப்பாக, அண்மைக்காலத்தில் ஒருசில ஆளுநர்களின் அதிகார அத்துமீறல்கள் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான உறவுகளை மோசமாக்கி உள்ளன. மாநில அரசுகளின் ஆட்சி அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு மசோதா, சட்டமாக்கப்படுவதை காலவரையின்றி நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கோ, குடியரசுத்தலைவருக்கோ தன்னிச்சையான அதிகாரங்கள் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வருவதற்கு, முந்தைய பல தீர்ப்புகள், இந்திய கூட்டாட்சியின் முறையை ஆய்வு செய்த குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அரசியல் நிர்ணய சபை விவாதங்களை உச்சநீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது.

ஆளுநர்கள் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட விசித்திர அதிகாரம் படைத்தவர்களாக உள்ளனர், ஆனால், அரசியலமைப்பு அவர்களுக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை முடக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லவே இல்லை.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பயன்படுத்தி, ஒன்றிய அரசு இந்த சர்ச்சைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். தேவைப்பட்டால், இந்த தீர்ப்புக்கு ஏற்ப அரசியல் சட்டத் திருத்தங்களைக் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கலாம். இதற்கு பதிலாக, ஏற்கனவே தீர்வு காணப்பட்ட விவகாரத்தை குடியரசுத்தலைவரின் கேள்விகள் மூலம் ஒன்றிய அரசு மீண்டும் எழுப்பி உள்ளது.

அரசியல் சட்ட வல்லுநர்கள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளபடி, குடியரசுத் தலைவரின் கேள்விக்கு நீதிமன்றம் வழங்கும் கருத்து, நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றாது என்பது தெளிவுபட்டிருக்கிறது. குடியரசுத்தலைவரின் கேள்விகள் என்ற அசாதாரண பாதையை தேர்ந்தெடுப்பதன் மூலம், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வழங்காத அதிகாரங்களை ஆளுநர்கள் மூலம் பயன்படுத்துவதற்கான நோக்கத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது.

ஆளுநரின் அதிகாரம் குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கியதற்கு, முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டி, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஒன்றிய அரசு தேட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்புச் சட்டமே உயர்ந்தது” : ஜகதீப் தன்கருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதில்!