Politics

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட்ட தண்டனை என்ன? - முழு விவரம் இங்கே!

கோவை பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த விவகாரத்தை கண்டும் காணாமல் இருந்து வந்தது. பின்னர் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தனர்.

ஏன் பொள்ளாச்சி பகுதியிலேயே திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்படியான அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாத அப்போதைய அதிமுக அரசு வேறுவழி இல்லாமல் வழக்கை பதிவு செய்தது.

பின்னர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சியை சேர்ந்த சபரி ராஜன் திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரண்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை போலிஸார் கைது செய்தனர். இதில் அருளானந்தம், பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளராக இருந்துள்ளார்.

இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, இவர்களுக்கு சாகும் வரைஆயுள் தண்டனை வித்து உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் குற்றவாளியான A1 சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை, A2 திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை, A3 சதீஸ்க்கு 3 ஆயுள் தண்டனை, A4 வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை, A5 மணிவண்னுக்கு 5 ஆயுள் தண்டனை, A6 பாபுவுக்கு 1 ஆயுள் தண்டனை, A7 ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனை, A8 அருளானந்தத்திற்கு 1 ஆயுள் தண்டனை, A9அருண்குமாருக்கு 1 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Also Read: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளியை பாதுகாத்த அ.தி.மு.க : வெளியான அதிர்ச்சி தகவல்!