Politics

நீட் முறைகேடு : கேள்வி தாள் மாணவர்களுக்கு கிடைத்தது எப்படி ? CBI குற்றப்பத்திரிகை கூறியது என்ன ?

கடந்த ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்தது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக இதுபோன்ற சம்பவங்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஏராளமான முறைகேடுகள் அம்பலமாகின.

இந்த நிலையில், நீட் தீர்வு தொடங்குவதற்கு முன்பே கசிந்த நீட் கேள்வி தாள் மாணவர்களுக்கு கிடைத்தது சி.பி.ஐ குற்றபத்திரிகை மூலம் அம்பலமாகி உள்ளது. இது குறித்து வெளியான தகவலின் அடிப்படையில், பீகார் மாநிலம் ஹசாரிபாக் SBI வங்கி கேள்வித்தாள் பெட்டகத்தை மே 5 ஆம் தேதி காலை 7:40 மணிக்கு வழங்கியுள்ளது என்பதும்7:53 மணிக்கு வினாத்தாள் பெட்டி ஒயாசிஸ் பள்ளியின் பாதுகாக்கப்பட அறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், பள்ளி நிர்வாகிகள் உதவியுடன் பங்கஜ் குமார் என்பவர் அந்த அறியின் பின் வாசல் வழியாக 08:02 மணிக்கு நுழைந்துள்ளார். அவர் 9:23 மணி வரை அங்கிருந்து நீட் கேள்வித் தாள்களை டிஜிட்டல் முறையில் நகல் எடுத்துள்ளார். பின்னர் அந்த கேள்வித்தாள் மற்றொரு கும்பலுக்கு அனுப்பப்பட்டு விடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதோடு தயாரான உயிரியல் கேள்விக்கான விடைகள் 10:50 மணிக்கு பாட்னாவில் உள்ள பல்தேவ் குமார் என்பாரின் கைபேசிக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பபட்டுள்ளதும், பின்னர் அவை நகல் எடுக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ குற்றப் பத்திரிகையில் தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பே மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் கைகளுக்கு நீட் கேள்வி மற்றும் விடைகள் கிடைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Also Read: "உலக நாடுகளே தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை பாராட்டுகிறது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !