Politics

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த விவகாரம் : நடிகர் குணால் கம்ராவுக்கு ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

மகாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிவசேனாவை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதனால், கொந்தளித்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை அடித்து நொறுக்கினர்.

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, குணால் கம்ரா மீது ஒரு வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீதும் என இரண்டு வழக்குகளை மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் . அந்த மனுவில் விழுப்புரத்தில் வசித்துவருவதாகவும் ,தான் மும்பை சென்றால் தன்னை போலீஸார் கைது செய்வார்கள் என்றும், சிவசேனா தொண்டர்களால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாகவும்

எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர்மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் எஸ்.சுரேஷ் ஆஜராகி, அவர் எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை, அவர் நன்கு அறியப்பட்ட நகைச்சுவை நடிகர் என்றும், நிகழ்ச்சி ஜனவரி மாதம் நடந்தததாகவும்,வீடியோ சமீபத்தில் பதிவேற்றப்பட்டதாகவும், அவரது நையாண்டி பேச்சு, பேச்சு சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார். அதோடு ஆளுங்கட்சி அமைச்சர்களால் அவர் மிரட்டப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி, குணால் கம்ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார். அதோடு வழக்கு குறித்து மகாராஷ்டிரா கார்க் போலீஸார் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Also Read: "இந்தி திணிப்பு எதிர்ப்பு போரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடித்து வைப்பார்" - துணை முதலமைச்சர் உதயநிதி !