தமிழ்நாடு சரபேரவையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மீதான விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து அந்த விவாதம் மீதான பதிலுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு அரசின் திட்டத்தால் தமிழகத்தில் உள்ள குடும்பத்தில் ஒருவராவது பயன்பெற்று வருகிறார்கள். இதுதான் உண்மையான மக்களாட்சிக்கான அடையாளம். அதனால் தான் நம்முடைய முதலமைச்சர் பின்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அணிதிரண்டு நிற்கின்றார்கள்.
பதவிக்காக அரசியலுக்கு வந்தவர் அல்ல நம்முடைய முதலமைச்சர். தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிடைத்த முதல் பதவியே மிசா சிறைவாசம்தான். இந்தியாவினுடைய ஜனநாயகத்தை காக்க 50 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கிய நம்முடைய முதலமைச்சர் இன்றைக்கும் இந்தியாவுடைய ஜனநாயகத்தை காக்கின்ற களத்தில் நிற்கின்றார்கள்.
1938 - ம் ஆண்டு தந்தை பெரியார் இந்தி எதிர்ப்பு போரை தொடங்கி வைத்தார். 1960 -ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன் நின்று நடத்தினார்கள். தமிழுக்காக தண்டவாளத்தில் தலையை வைத்த கலைஞர் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக இந்தி திணிப்பை என்றும் என்றும் எதிர்ப்போம் என்று முழங்கினார்கள்.
பெரியார்- அண்ணா -கலைஞர் அவருடைய ஒட்டுமொத்த உருவமாக நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார். 1930-ல் தொடங்கிய அந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போரை நம்முடைய முதலமைச்சர் நிச்சயம் முடித்து வைப்பார். முதலமைச்சர் தலைமையில் "தமிழ்நாடு வெல்லும் தமிழ்நாடு போராடும்" என தெரிவித்தார்.