Politics

“இந்தியர்களுக்கு கை விலங்குகள் போட்டிருக்கக் கூடாது!” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம்!

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு முகம் சுழிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அண்டை நாடுகளுடன் பொருளாதார போர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கை, ஐ.நா.வுடன் முரண் என டிரம்ப் முன்னெடுப்புகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

அதுபோன்ற முகம் சுழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியர்களை நாடு கடத்திய நிலையும் அமைந்துள்ளது. சுமார் 40 மணிநேரம் விலங்குகளுடன் இந்தியா அழைத்துவரப்பட்ட இந்தியர்களை கண்டு, ஒட்டுமொத்த நாடே கொதித்தெழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதை முன்கூட்டியே அறிந்தும் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிய ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “40 மணிநேரம் கைகளும், கால்களும் கட்டப்பட்டு இருக்கையிலிருந்து சிறிதளவு கூட நகர அனுமதிக்கப்படாமல் கொண்டுவரப்பட்டோம்” என அமெரிக்காவிலிருந்து இந்தியா அழைத்துவரப்பட்ட ஹர்விந்தர் சிங் பேசிய காணொளியை குறிப்பிட்டு, “இந்திய பிரதமர் அவர்களே, இவரின் வலியை கேளுங்கள். இந்தியர்கள் இறையாண்மையுடன் நடத்தப்பட வேண்டுமே தவிர, விலங்குகளுடன் நடத்தப்படக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

Also Read: திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.66 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!