Politics

“உற்பத்தி துறையில் மோடி அரசின் தோல்வி அச்சமூட்டியுள்ளது!” : நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கிய நாடளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 31ஆம் நாள் முதல் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2025-ல், பல்வேறு பழைய வரையறைகளே இடம்பெற்றுள்ளன என்றும், பெரும்பான்மை மக்களுக்கான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தேசிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இன்றைய (பிப்ரவரி 3) நாடாளுமன்ற கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அப்போது அவர், “இந்தியாவின் உற்பத்தி விழுக்காடு, கடந்த 10 ஆண்டுகளில் 15.3% இலிருந்து 12.6% ஆக குறைந்துள்ளது. இதற்கு நான் பிரதமரை விமர்சிக்கவில்லை. ஆனால், பிரதமரின் ஆட்சி தோல்வி கண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தியாவில் மீளாத் துயராக இருக்கும் வேலைவாய்ப்பின்மையை குறைப்பதற்கு, உற்பத்தியை பெருக்குவது அவசியம். இந்தியாவை பொருத்தவரை, பொருளாதார வளர்ச்சி ஓரளவிற்கு இருப்பினும் அதற்கேற்ற மக்கள் வளர்ச்சி இல்லை. காரணம், சேவைகளுக்கும், நுகர்வுகளுக்குமே இந்தியாவில் முக்கியத்துவம் தரப்படுகிறது, உற்பத்திக்கு இல்லை. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஒருங்கிணைக்கிற (Assemble) பணி தான் இந்தியாவில் நடைபெறுகிறது. அதாவது, Made in China, Assembled in India முறை தான் தொடர்கிறது. இதுவே, வேலைவாய்ப்பின்மைக்கு காரணமாகவும் இருக்கிறது.

உலக அளவில் அதிகப்படியாக உற்பத்தி தரவுகள் சீனாவிடமும், நுகர்வோர் தரவுகள் அமெரிக்காவிடமும் இருக்கிறது. ஆனால், இந்தியாவிடம் எந்த தரவும் இல்லை. இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கும் கூகுள், முகநூல் போன்ற நிறுவனங்கள் நம் தரவுகளை அமெரிக்காவிற்கு எடுத்துச்செல்கிறது. நாம் தரவுகளை பெறக்கூடிய இடத்தில் இருப்பது அவசியம்.

உலகம் மாற்றத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. பெட்ரோலுக்கு பதிலாக பேட்டரிக்களும், மோட்டார் வாகனங்களுக்கு மாற்றாக மின்னணு வாகனங்களும் முன்னிலை பெற்று வருகிறது. இது போன்ற மாற்றத்திற்கான நேரத்தில் அதற்கேற்ற முன்னெடுப்புகள் இருக்க வேண்டியது முக்கியம். ஆனால், மாற்றத்திற்கேற்ற பணிகளில் ஈடுபடுவதில் இந்தியா தோற்றுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. காரணம், உற்பத்தி மேலாண்மையில் சீனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது” என தெரிவித்தார்.

இதனையடுத்து, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவில் 50% க்கும் மேலானோர் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள் தான் என்பது, மாநிலங்களால் முன்னெடுக்கப்படும் சாதிவாரி கணக்கெடுப்புகளின் வழி தெளிவடைகிறது. எனினும், ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினர்கள் நியமனம் செய்யப்படுவதில்லை” என்றார்.

Also Read: "ஒன்றிய அரசின் பட்ஜெட், கூட்டணி கட்சிகளை சரிசெய்யும் பட்ஜெட்" - அமைச்சர் MRK பன்னீர் செல்வம் விமர்சனம் !