Politics

ஆளுநரின் முரண்பாடுகள் : தி.மு.க சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், ஒன்றிய அரசின் கைக்கூலியாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அ.தி.மு.க - பா.ஜ.க கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் தி.மு.க சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் தி.மு.க சார்பில் சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, தி.மு.க மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “மிகுந்த திமிருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர் ஆர்.என்.ரவியே. இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் ஆக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்ற வைத்தெரிச்சல் தாங்காமல் ஆளுநர் உள்ளார். அவரின் செயல்கள், முதலமைச்சரின் புகழை கூடுதலாக உச்சமடைய செய்யும்” என்றார்.

தொடர்ந்து பேசிய தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, “மூன்றாவது ஆண்டாக ஆளுநர் ஹாட்ரிக் அடித்துள்ளார். பள்ளி குழந்தைகள் விடுமுறைக்கு கதை சொல்வது போல் ஆளுநர் செயல்படுகிறார். விடுமுறை விண்ணப்பம் எழுதி அனுப்புங்கள் முதலமைச்சர் போனால் போகட்டும் என விட்டுவிடுவார். ஏன் பாதியில் ஓடுகிறீர்கள். முதலமைச்சர் எழுந்து நின்றாலே ஓடுகிறீர்கள். தயவுசெய்து வந்து அசிங்கப்படாதீர்கள்! எனக்கே பாவமாக உள்ளது.

தமிழர்களின் உணர்வுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி கொச்சைப்படுத்தி வருகிறார். அவர் ஒன்றைப் புரிந்துக்கொள்ள வேண்டும். இன எதிரிகளை புறமுதுகுகாட்டி ஓடவிட்ட இயக்கம் தான் தி.மு.க. இன்று ஆளுநரும் அப்படிதான் ஓடியிருக்கிறார்” என குற்றம் சாட்டினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “எப்படியாவது ஆளுநர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்துவதா? இதுபோன்று தொடர்ந்து செய்தால் தமிழ்நாட்டு மக்கள், ஆர்.என்.ரவியை மன்னிக்க மாட்டார்கள் பின்னணி வேறு மாதிரி இருக்கும்” என்றார்.

Also Read: சிந்துவெளி புதிருக்கு விடை கண்டுபிடித்தால் ரூ.8.5 கோடி - முதலமைச்சரின் உலகப் பரிசு : முரசொலி தலையங்கம்!