Politics

ஒடுக்குமுறையிலிருந்து மீண்டெழும் முனைப்பில் ‘உத்தரகாண்ட்’ : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

கடந்த 2000-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனி மாநிலமாக ‘உத்தரகாண்ட்’ அறிவிக்கப்பட்டது. அதனால், அம்மாநிலத்தின் நிலப்பரப்பும், தொகுதிகளை போல மிக குறுகிய அளவே உள்ளது.

நிலப்பரப்பில், சுமார் 86% பகுதி மலைப்பகுதியாகவும், 65% பகுதி வனப்பகுதியாகவும் இருக்கிறது என்பதால், மக்கள் தொகையும் அப்பகுதியில் குறைவாகவே இருக்கிறது.

இமயமலையின் அடிப்பகுதியை ஒட்டி இருக்கும் காரணத்தால், உத்தரகாண்டில் இயற்கை சீற்றங்களும் இயல்பாக நடக்க கூடியாதாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில், இயற்கை சீற்றங்களை கூட பொறுத்து கொள்ளலாம். ஆனால், ஆர்.எஸ்.எஸ்-ன் உந்துதலில் இயங்கும் பா.ஜ.க ஆட்சியில் இழைக்கப்படும் கொடுமைகளை பொறுத்தக்கொள்ள இயலாது என்ற மக்களின் குமுறல்கள் அதிகரித்துள்ளன.

அக்குமுறல்களுக்கான பல காரணங்களில், சில என பொது உரிமையியல் சட்டம் (UCC) நிறைவேற்றம்; அல்துவானி கலவரம்; சில்க்யாரா சுரங்க பணியில் ஏற்பட்ட சிக்கல், ஊதியமற்ற பெண் ஊழியர்கள் நிலை, சமத்துவமின்மை ஆகிய எண்ணற்ற செய்திகள் உள்ளடங்கியுள்ளன.

பொது உரிமையியல் சட்டம், இந்தியாவின் பல தரப்பட்ட மக்களின் விமர்சனத்திற்குள்ளான நிலையிலும், அதனை முதலில் நடைமுறைக்கு கொண்டு வந்த மாநிலம் என்ற சாடலுக்குரிய அரசாகவும் மாறியிருக்கிறது உத்தரகாண்ட் பா.ஜ.க. அரசு.

இதனால், ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உறவுகளுக்கிடையில் உள்ள சுதந்திரம் பறிக்கப்பட்டு; இஸ்லாமிய திருமண முறைகள் குற்றமாக்கப்பட்டு; உத்தராகண்ட் மாநிலத்தின் 2.9% மக்களாக விளங்கும், பழங்குடியினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான கண்டனங்களுக்கே சரியான பதில் கிடைக்கப்பெறாத போது, சிறுபான்மையினரின் வணிக பகுதியான அல்துவானியையும் சுடுகாடாக்கியுள்ளது, பா.ஜ.க அரசு.

ஆங்கிலேயர் காலத்தில், இஸ்லாமிய சமூகத்திற்கு வழங்கப்பட்ட அல்துவானி பகுதியின் குறிப்பிட்ட இடம், எழுத்துருவில் சான்றுகளற்று இருந்த காரணத்தால், அது அரசிற்கு உரியது என கூறி, அவ்விடத்தில் அமைந்திருந்த இஸ்லாமிய கல்விச்சாலை, மசூதி ஆகியவற்றை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இடித்து நொறுக்கியது பா.ஜ.க.

தட்டிக்கேட்க சென்ற அப்பாவி மக்கள் மீது, துப்பாக்கி சூடு நடத்தி, பெண்களை தடியால் அடித்து துரத்தியது மட்டுமல்லாமல், 5 பேரை கொல்லவும் செய்தது பாசிச ஆட்சியின் கீழ் செயல்பட்ட, உத்தராகண்ட் காவல்துறை.

எனினும், கலவரம் மக்களால் உருவாக்கப்பட்டது போல காட்சியளித்து, சுமார் 42-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது அம்மாநில அரசு. அதோடு மட்டுமல்லாமல், அப்பகுதி மக்கள் உண்பதற்கு கூட வழியில்லாமல், ஊரடங்கு பிறப்பித்து வஞ்சித்தும் வருகிறது.

ஊடகங்களும், அறிவியலும் பல்வேறு வளர்ச்சியடைந்துள்ள இக்காலத்திலும், வெளிப்படையாக சிறுபான்மையினரை குறிவைத்து, அழிக்க முற்படுகிற இவ்வகை சம்பவங்கள் தேசிய அளவில் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

இந்த சிக்கல் போதாது என்று, உத்தரகாண்ட் மாநிலத்தில் சில்க்யாரா என்ற பகுதியில், சுரங்கப்பாதை அமைக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 41 கட்டடப்பணியாளர்கள், புவியியல் அமைப்பு காரணமாக, சரிவில் சிக்கிக்கொண்டர்.

பா.ஜ.க அரசின் ஒழுங்கான திட்டமின்மையால், அவதிக்குள்ளான அந்த 41 கட்டடப்பணியாளர்களை மீட்டெடுக்கும் பணியில் முதன்மையாளராக செயல்பட்ட, வகில் ஹாசன் அப்போதைய அளவில் பாராட்டப்பட்டார்.

எனினும், அப்பாராட்டை ஏற்க கூட நேரம் தராமல், அவரது வீட்டையும் இடித்து தரைமட்டமாக்கியது, பா.ஜ.க. அரசு. “காரணமற்ற நிலையில், இஸ்லாமியர் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவா எங்கள் வீட்டை இடித்தீர்கள்” என வகில் ஹாசன் மனைவி கேள்வி எழுப்பினார். வழக்கம் போல, ஒன்றிய அரசிடமிருந்து அதற்கும் விடையில்லாமல் போனது.

இது, போன்ற இனத்தின் மீதான வெறுப்புணர்ச்சி ஒரு புறம் இருக்க, பெண்களுக்கு எதிரான அநீதிகளையும் அடுக்கி குவித்து வருகிறது உத்தரகாண்ட் அரசு. இது குறித்து, அம்மாநிலத்தில் நாள் கணக்கில் வருவாய் பெரும் பெண்கள், “கடுமையான பணிகள் கொடுக்கின்றனர். நாளுக்கு நாள் பணி சுமை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. எனினும், தகுந்த ஊதியம் கிடைக்கப்பெறுவது இல்லை” என வருந்தியுள்ளனர்.

இவை தவிர்த்து, சமத்துவ கல்வியிலும், உத்தரகாண்ட் கடை நிலையில் தான் உள்ளது.

இவ்வேளையில், உத்தரகாண்ட் மாநிலம் ஒப்பீட்டளவில் மிகச் சிறிய மாநிலம். இந்துக்களின் எண்ணிக்கை அதிகம். இஸ்லாமியர்களும் 13 விழுக்காட்டினர் மட்டுமே இருக்கின்றனர்.

எனவே, எதிர்ப்புகளை எளிமையாகக் கையாளலாம் என்ற எண்ணத்துடன் இந்து- இஸ்லாமியர்கள் இடையிலான பிளவை அதிகரித்து, இந்துக்களை பா.ஜ.க.வின் பின்னால் அணிதிரட்டலாம் என்கின்ற இவர்களது கனவு எதிர்வரும் நாடாளுமன்ற் தேர்தலில் தவிடுபுடியாகும்.

அண்மை காலங்களில் சந்தித்த நெருக்கடிகள் காரணமாக, உத்தரகாண்ட் அரசின் செயல்பாடுகளை எதிர்த்து, உரிமை குரல் எழுப்பி வருகிற மக்களின் போராட்ட குணமும், மக்களின் மனங்களில் பதிந்திருக்கிற மதச்சார்பின்மை உணர்வும், இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக அமைந்துள்ளது.

ஆகையால், இந்தியா கூட்டணியின் வெற்றி பயணத்தில், உத்தரகாண்ட் மக்களின் பங்கும் இன்றியமையாத இடத்தை பெறும் என்பதில் எவ்வித மாற்றுகருத்திற்கும் இடமற்ற நிலை உருவாகியுள்ளது.

Also Read: இந்து வேறு - இந்துத்துவம் வேறு எனும் ‘இமாச்சலப் பிரதேசம்’ : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!