Politics

பள்ளிக்குச் செல்லாமல் தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் : CBSE பள்ளிகளில் நடக்கும் மோசடி !

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் போலவே ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஜே.இ.இ, சி.யூ.இ.டி என தொடர்ந்து நுழைவு தேர்வுகளை ஒன்றிய அரசு நடத்தி வருகிறது. இதனால் பள்ளியில் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியத்துவதை இழந்து வருவதாக கல்வியாளர்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.

எனினும் ஒன்றிய அரசு நுழைவு தேர்வுகளை தொடர்ந்து நடத்தி வருவதோடு, அதற்க்கு அதீத முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. இது போன்ற நுழைவு தேர்வுகளால், தனியார் பயிற்சி மையங்களே அதிக லாபம் பெற்றதை அறிந்தும், அதற்கு ஒன்றிய பாஜக அரசு துணை சென்று வருகிறது.

சமீப காலமாக தனியார் பயிற்சி மையங்களில் நுழைவுத்தேர்வுக்காக படித்துவரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு தரப்பில் இருந்தும் நுழைவு தேர்வுகளுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், CBSE பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராவதற்காகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. இது குறித்து ‘தி டெலிகிராஃப்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், CBSE பள்ளிகளில் +1 மற்றும் +2 படிக்கும் மாணவர்கள், இரண்டு ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லாமல், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராவதற்காகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் போலியாக வருகைப்பதிவு செய்வதாகவும், இதற்காக பள்ளி நிர்வாகவும், தனியார் பயிற்சி மையங்களும் கூட்டு வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து புகார் எழுந்த நிலையில், CBSE நடத்திய ஆய்வில் இந்த குற்றச்சாட்டு உண்மை என்பதும், இது குறித்து 23 பள்ளிகளுக்கு CBSE சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி தேர்வுகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்றும், நுழைவு தேர்வுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: “சில காரணங்களால் என்னால் போட்டியிட முடியாது...” : பின்வாங்கிய வேட்பாளர் - கலக்கத்தில் பாஜக தலைமை !