Politics
திப்பு சுல்தானை வைத்து அவதூறு.. மோடியை வரவேற்க கவுடா சகோதரர் என மருது சகோதரர்கள் புகைப்படத்தை வைத்த பாஜக!
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தனது அரசின் தோல்விகளை மறைக்க பாஜக அரசு கர்நாடகாவில் மதவாத அரசியலுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஹிஜாப் சர்ச்சை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என இந்துத்துவ கும்பலால் நாளுக்கு நாள் கர்நாடகாவில் மதவாத அரசியல் தலைவிரித்தாடுகிறது. இதுதவிர சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர்களின் பெயரை சிதைக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்தியாவை கைப்பற்ற நினைத்த ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த மைசூர் சிங்கம் திப்புசுல்தானை ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த உரி கவுடா -நஞ்சே கவுடா ஆகியோர் கொலை செய்ததாகவும் அவர் ஆங்கிலேயரால் கொலைசெய்யப்படவில்லை என்றும் கர்நாடக பாஜகவினர் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக செல்லவுள்ள பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பேனரில் உரி கவுடா -நஞ்சே கவுடா ஆகியோர்களின் புகைப்படத்தை வைத்து பாஜக போலிசெய்திகளை பரப்பி வருகிறது. ஆனால் பாஜகவினர் உரி கவுடா -நஞ்சே கவுடா என தமிழ்நாட்டை சேர்ந்த மருது சகோதரர்களின் புகைப்படத்தை வைத்து போலி புகைப்படத்தை பகிர்ந்து வருவது தற்போது வெளியாகியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு பலரும் பாஜகவின் மோசமான அரசியலை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!