உணர்வோசை

காதல் கொண்டவரிடம் possessiveness காட்டுவது சரியா ? உடைமை மனநிலைக்கும் இதற்கும் ஒற்றுமை என்ன ?

Possessiveness தவறா?

எந்த சமூகத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே இதற்கான பதில் அமைகிறது.

உங்கள் மொபைல் உங்களிடம் இல்லை என்றால் பதறுவீர்களா? உங்கள் வாகனத்தை வேறொருவர் வைத்துக் கொள்ள கேட்டால் கொடுப்பீர்களா? உங்களின் தாயை, உங்கள் நண்பர் உங்களை விட அதிகம் உரிமை கொண்டாடினால் என்ன செய்வீர்கள்?

இவ்வுலகில் இருக்கும் எல்லாவற்றையும் நாம் possess செய்கையில், அதே மனநிலைதானே நம் காதலரிடமும் பார்ட்னரிடமும் வரும்! உடைமை மனநிலை இருக்கும்வரை possessiveness இருக்கவே செய்யும்.

ஒரு பெண்ணையோ ஆணையோ எப்படி உடைமையாக பார்க்கலாம் என கேட்கலாம். அதே கேள்விதான் உங்களுக்கும்.

இங்கு இருக்கும் கல்விமுறையே உடைமை மனநிலை போன்ற கருத்தாக்கங்களையும் நிலப்பிரபுத்துவ எச்சங்களையும் முதலாளித்துவத்துக்கான அச்சாரங்களையும் வழிமுறைகளையும் நமக்குள் உருவாக்க உருவாக்கப்பட்டதுதான். ஆக, படித்திருந்தாலோ வேலைக்கு சென்றாலோ மட்டும் possessiveness எப்படி போக முடியும்?

பொருளியல் சூழலை தாண்டி, நம் அகநிலைக்கான தனிமை போக்க, ஆதரவு நாடி துணை கொள்வதும் இருக்கிறது. அங்குமே possess பண்ணக்கூடாது என்பதுதான் தார்மீகம். சூழல் அப்படி இல்லை என்பதே யதார்த்தம்.

விளைவாக, இந்த உடைமை மனநிலை கொண்ட சமூகத்தில் பிரிவுகள் மறைக்கப்படுகின்றன. விலகல்கள் திரிக்கப்படுகின்றன. விருப்பங்கள் புதைக்கப்படுகின்றன. துரோகங்கள் வலிகள் ஆகின்றன. நிறைய greyer relationships உருவாகி இன்னும் பிரச்சினை கூட்டுகின்றன.

பெண்ணையும் ஆணையும் சொத்து, வீடு, வருமானம், சார்பு, குழந்தை, எதிர்காலம், வேலை என பல சமூக பொருளாதார தளைகளை கொண்டு கட்டி வைத்திருக்கிறோம். அதில் ஒரு தளையை மட்டும் அறுத்துக் கொள்ளலாம் என பேசினால் எத்தனை போலித்தனம் அது!

ஒரு தளையை மட்டும் அறுத்தால், அதோடு தொடர்பு கொண்டிருக்கும் மொத்த தளைகளும் அறுபடுமல்லவா? அச்சமூக உறவுகள் யாவும் துண்டாகும் அல்லவா? அவற்றுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறோம்?

மொத்தத்துக்கும் தீர்வு சொல்லாமல் ஒரு தளையை மட்டும் அறுத்துக் கொள்ள உங்களை உந்துவதே முதலாளித்துவ பொருளியல் சிந்தனைதான். அதற்கு தேவை அதன் லாபம் மட்டுமே. நீங்கள் தனியாதல் மட்டுமே. அதனால் ஏற்படும் பிற சிக்கல்களை என்ன செய்வதென்ற கேள்விக்கு எல்லாம் அது விடை அளிக்காது.

ஒருவேளை கம்யூனிஸ பொருளியலை நீங்களும் உங்கள் துணையும் புரிந்திருந்தால் மட்டுமே possessiveness இல்லாமல் வாழ்வதை பற்றி யோசிக்கவாவது முடியும். அதுவும் இருவருக்கும் புரிந்திருந்தால் மட்டுமே! ஏனெனில் கம்யூனிஸம் மட்டும்தான் உடைமை மனநிலையை உடைத்து, மாற்று சமூகத்துக்கான சமூக உறவுகளை, மொத்தத்துக்கும் தீர்வாக முன் வைக்கிறது.

சமூக பொருளாதார உறவுகளை மாற்றாமல் உடைமை மனநிலையை மாற்றவே முடியாது.

அப்படியெனில் possessiveness-ஐ ஆதரிக்க வேண்டுமா ?

நிச்சயமாக இல்லை. எல்லா சமூக உறவுகளையும் அப்படியே வைத்துக் கொண்டு உடைமை மனநிலையை மட்டும் அறுக்க சொல்லும் அரசியல் எது என்பதை அறிந்திடவேண்டும். அதன் காரணத்தை ஆராய வேண்டும்.

தற்போதைய நிலையில் possessiveness இல்லாமல் எல்லாம் இருக்க முடியாது. அகத்துக்கும் புறத்துக்குமே அது தேவையாக இருக்கிறது. வேண்டுமானால் குறைத்து கொள்ளலாம். அதுவும் புரிந்துகொண்டால் மட்டுமே சாத்தியம்.

Also Read: பழனிசாமி பெருசா ? அண்ணாமலை பெருசா ? -ஒரே கூட்டணியில் இருந்தும் அடித்துக்கொள்ளும் அதிமுக-பாஜக கட்சியினர் !