murasoli thalayangam

”இந்தியாவுக்கான தளபதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : வாழ்த்தி வணங்குகிறது முரசொலி!

முரசொலி தலையங்கம் (01-03-2025)

அவரே தலைவர்! அவரே முதல்வர்!

அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகம் பெருமை அடைந்து கொண்டிருக்கிறது!

அவரை முதலமைச்சராக ஏற்றி வைத்த மகிழ்ச்சியை தமிழ்நாடு அடைந்து கொண்டிருக்கிறது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மாபெரும் மகுடங்களையும் மிகக் குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக நிறைவேற்றிக் காட்டி தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தமிழ்நாட்டையும் தலைநிமிர்ந்து நிற்க வைத்து விட்டார்கள்.

அவரைப் போல இருப்பாரா? இவரைப் போல முடியுமா? என்ற கற்பனை ஆரூடங்கள் மூலமாக அவரை மட்டம் தட்டும் முயற்சிகள் அப்போது நடந்தன. அதனை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கெடுமதி யாளர்களது கெட்ட எண்ணங்களுக்குத் தீனி போடாமல் அவர் தனது பயணத்தைத் தொடங்கினார். 'அவருமல்ல, இவருமல்ல, நான்.. நான் மட்டும்தான்' என்பதைச் சொல்லாமல் சொன்னார் தலைவராகப் பொறுப் பேற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின்.

ஐம்பது ஆண்டு காலத் தலைமைப் பதவியில் இருந்து மறைந்தார் தமிழினத் தலைவர் கலைஞர். அந்த இடத்தை இட்டு நிரப்புவது என்பது சாதாரண சாமானியக் காரியம் அல்ல. அரை நூற்றாண்டுகால நிரூபிப்புக் காலம் அது. இவர் தன்னை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருந்தார். இதுதான் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இருந்த மிகப்பெரிய நெருக்கடி ஆகும்.

நெருக்கடி காலத்தில் (1976) கைதானதால் தியாக அரசியலுக்குள் வந்த தளபதி அவர்கள், நெருக்கடியான நேரத்தில் (2018) தான் தலைவராகவும் ஆனார். ‘அவர் மறைந்தார் -- இவர் வந்தார்' என்று ‘ஏழுக்கு அடுத்தது எட்டு' என்பதாக இல்லாமல், தனது இலக்கை மிகமிகப் பெரியதாக அமைத்து எல்லோரையும் அண்ணாந்து பார்க்க வைத்தார் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தி.மு.க. வின் தலைமைப் பதவிக்கு வந்த அன்றே, 'இந்தியாவுக்கு காவிச் சாயம் அடிக்க நினைக்கும் மோடியை வீழ்த்த வா!' என்று போர் பிரகடனம் செய்த அன்றுதான் அவர் கழகத் தளபதியில் இருந்து தமிழ்நாட்டுத் தளபதியாக ஆனார். பெரியார் - அண்ணா - கலைஞர் ஆகிய மூவரின் வார்ப்பு இவர்தான், மூவரின் இன்றைய முகம் இவர்தான், அவர்கள் இல்லை என்று நினைக்க முடியாது, இதோ இவர் இருக்கிறார் என்பதைக் காட்டினார்.

2019 தேர்தலில் தி.மு.க.வை மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அமர வைத்தார். நம்மை எதிர்க்க எதிரிகளே இல்லை என்ற இறுமாப்பில் இருந்த பா.ஜ.க. தலைமைக்கு எதிராக ‘இந்தியா' கூட்டணியை உருவாக்கி மோடிக்கே பயத்தைக் காட்டினார். மைனாரிட்டி ஆட்சியை, நிதிஷ் - சந்திரபாபு தயவில்தான் இன்று மோடி நகர்த்திக் கொண்டிருக்கிறார். அதற்கான விதையைப் போட்டதன் மூலமாக 'இந்தியாவுக்கான தளபதியாக' உருப்பெற்று நிற்கிறார் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இவை வெறும் அரசியல் - தேர்தல் வெற்றியாக முற்றுப்பெற்றுவிடவில்லை. திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் பேசும் சமூகநீதியை இன்று இந்தியா பேசுகிறது. அவர் பேசும் மாநில சுயாட்சியின் குரல் இன்று இந்தியா முழுமைக்கும் கேட்கிறது. மொழிப்பற்றும் - இன உரிமையும் - கூட்டாட்சிக் குரலும் இந்தியா முழுவதும் கேட்கிறது. ‘திராவிட மருந்து' இன்று இந்தியா முழுமைக்கும் பரவி வருவதற்குக் காரணம் - முழுமுதல் காரணம் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்.

‘ஏன் எதையும் தமிழ்நாடு மட்டும் எதிர்க்கிறது?' என்று கேட்டவர் மத்தியில், 'இதோ இந்தியாவின் பல மாநிலங்கள் சேர்கிறது' என்று காட்டியவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். மோடியை எதிர்ப்பது, பா.ஜ.க. வை வீழ்த்துவது என்பது கொள்கைப் பூர்வமாக இருக்க வேண்டுமேதவிர, வெறும் தேர்தல் கால கோஷமாக முடிந்துவிடக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப இந்தியத் தலைவர் களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

முதலமைச்சராக அவர் பொறுப்பேற்கும் போதும் அவரைச் சிலர் கணிக்கத் தவறினார்கள். அந்தக் கணிப்புகளுக்கு நான்கே ஆண்டுகளில் பதில் அளித்து விட்டார்.

தமிழ்நாட்டை இந்திய நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக உயர்த்திவிட்டார். தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் பங்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 9.21 விழுக்காடாக உயர்த்திவிட்டார். ஐ.நா. வளர்ச்சிக் குறியீடுகளாக இருந்தாலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் பொருளாதாரக் குறியீடுகளாக இருந்தாலும் அனைத்திலும் தமிழ்நாடு அதிக அளவிலான வளர்ச்சியைப் பெற்றுள்ள மாநிலமாக உயர்த்திக் காட்டிவிட்டார்.

வறுமைக் குறியீடுகளில் இந்தியாவின் சராசரி விழுக்காடு என்பது 14.96 ஆக இருக்கும்போது தமிழ்நாடு 2.2 விழுக்காடாக இருக்கிறது என்ற சூழலை உருவாக்கி விட்டார். பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கி விட்டார். இந்தியாவில் அதிக தொழில் நிறுவனம் உள்ள மாநிலமாக, அதிக தொழிலாளர் உள்ள மாநிலமாக, அதிக பெண் தொழிலாளர் உள்ள மாநிலமாக மாற்றிவிட்டார். ரூ.18 லட்சம் கோடிக்கும் மேலான தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வருவதை உறுதி செய்து கொடுத்துவிட்டார். தனியார் துறைகளில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் காட்டி விட்டார். இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் அதிகமாகி வரும்போது தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கத்தைக் குறைத்துக் காட்டி விட்டார்.

பெண்களின் பொருளாதாரத்தை 'உரிமைத் தொகை' மூலமாகவும் ‘விடியல் பயணம்' மூலமாகவும் உயர்த்தி விட்டார். இளைஞர்களை அனைத்து வகைகளிலும் திறமையாளர்களாக உயர்த்திக் கொண்டிருக்கிறது 'நான் முதல்வன்'. மாணவியருக்கு ‘புதுமைப் பெண்' திட்டமும், மாணவர்க்கு ‘தமிழ்ப் புதல்வன்' திட்டமும் மிகப்பெரிய உயரத்தை அடைய அடித்தளம் அமைத்து வருகிறது. ‘காலை உணவுத் திட்டம்' பள்ளிக் குழந்தைகள் உடலை உறுதி செய்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அவர் தலைவரானபோது சந்தேகம் கிளப்பியவர்கள், அவர் முதல்வரான போது நம்பிக்கை கொள்ளாதவர்கள் இன்று அதிகமாக அவரைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

‘அவரே தலைவர்' என்கிறார்கள்!

‘அவரே முதல்வர்' என்கிறார்கள்!

உழைப்பு அவரை உருவாக்கியது. உண்மை அவரை உயர்த்திக் காட்டி இருக்கிறது. 72 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தலைவரை, முதல்வரை முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்தபிள்ளையாம் 'முரசொலி' வாழ்த்தி வணங்குகிறது!

Also Read: தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையும் என்பதை பிரதமரே ஒப்புக் கொண்டு இருக்கிறார் : முரசொலி தலையங்கம்!