murasoli thalayangam

”தமிழ்ச் சமுதாயத்துக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் ஜகதீப் தன்கர்” : முரசொலி!

முரசொலி தலையங்கம் (25-02-2025)

ஜகதீப் தன்கரே எச்சரிக்கிறார்!

இந்தித் திணிப்பை அரசியல் காரணங்களுக்காக நாம் எதிர்ப்பதாகச் சிலர் உளறிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குப் பதில் சொல்லும் வகையில் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரே பேசி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு மொழியின் பெருமையையும் அருமையையும் சொல்லி எச்சரிக்கிறார் தன்கர்.

டெல்லியில் 98 ஆவது அகில பாரதிய மராத்தி சாகித்திய மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார் இந்திய நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள். மாநிலங்களவை அவைத் தலைவர் அவர். அவரைப் பற்றி அதிகம் அறிமுகம் செய்யத் தேவையில்லை. அந்த மாநாட்டில் ஜகதீப் தன்கர் ஆற்றிய உரையின் சில வரிகளை வாசியுங்கள்...

"ஒரு நாடு, அதன் கலாச்சார வளம் மற்றும் கலாச்சாரப் பண்பாடுகளால் வரையறுக்கப்படுகிறது. நமது முன்னோர்கள் நமது கலாச்சாரத்தையும் மொழிகளையும் வளர்த்தனர். அதே வழியில் வளர்ப்பது நமது கடமை. இலக்கியத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கைகோத்துச் செயல்படுவதன் மூலம் மட்டுமே இதைச் செழிக்கச் செய்ய முடியும். ஒரு வட்டாரத்தை (பிராந்தியத்தை, மாநிலத்தை) வீழ்த்த வேண்டுமானால் அதைக் கைப்பற்ற வேண்டிய- தில்லை. அந்த வட்டாரத்தின் மொழியை அழிப்பதுதான் சிறந்த வழி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நுழைந்த ஆக்கிரமிப்பாளர்கள் அதே வழியைத்தான் கடைப்பிடித்தனர். அவர்கள் கொடூரமானவர்களாகவும் நமது மொழி, கலாச்சாரம், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றை வெறுப்பவர்களாகவும் அடக்குமுறையாளர்களாகவும் இருந்தனர். பழிவாங்கும் தன்மையுடனும் கொடுங்கோன்மையுடனும் திகழ்ந்தனர். நமது மொழிகள் வளர முடியாத அளவுக்குத் தடுத்தனர். நமது மொழி தழைக்காவிட்டால் நமது வரலாறு தழைக்காது”-- என்று பேசி இருக்கிறார் இந்திய நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்.

உண்மையில் நாம் அவருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். உண்மையைப் பேசியதற்காக! அதுவும், உரக்கப் பேசியதற்காக! அதுவும், இந்தக் காலக்கட்டத்தில் பேசியதற்காக!

தமிழினத்தை வீழ்த்தவே இந்தி திணிக்கப்படுகிறது, தமிழர் பண்பாட்டை அழிக்கவே இந்தி திணிக்கப்படுகிறது, தமிழை அழிக்கவே இந்தி திணிக்கப்படுகிறது என்று நாம் சொன்னால், அதனை அரசியல் என்று ஒதுக்கித் தள்ளுகிறார்கள் பா.ஜ.க. கைத்தடிகள். “ஒரு மாநிலத்தை வீழ்த்த வேண்டுமானால் அதன் மொழியை அழிப்பதுதான் சிறந்த வழி என்பதையும் சொல்லி, இந்திய ஆக்கிரமிப்பாளர்கள் அந்த வழியைத்தான் கடைப்பிடித்தார்கள் என்பதையும் சொல்லி தமிழ்ச் சமுதாயத்துக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் ஜகதீப் தன்கர். இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளாதீர்கள், இறுதி வரை போராடுங்கள் என்று ‘மறைமுகமாக'த் தூண்டி இருக்கிறார் தன்கர்.

தமிழ் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இதுபோன்ற மொழிப் படையெடுப்புகளில் சிக்கியே வருகிறது. வடக்கே இருந்து வந்த ஆரியர்கள் தமிழ்நாட்டின் மீது நடத்திய பண்பாட்டுப் படையெடுப்பாக தங்களது வைதீக மதத்தை, வருணக் கோட்பாட்டை இங்கு திணித்தார்கள். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தமிழர் பண்பாட்டைச் சிதைத்தார்கள். இறைப்பெயர்களை மாற்றினார்கள். இறைவழிபாட்டு முறையை மாற்றினார்கள். தமிழ் இருந்த இடத்தில் சமஸ்கிருதத்தைப் புகுத்தினார்கள். வேத மறைகளை, தமிழ் மறைகளாக மாற்றினார்கள். சமஸ்கிருதம்தான் தேவபாஷை, தமிழ் நீஷ பாஷை ஆனது. திருக்குறளும் சங்க இலக்கியங்களும் இருந்த இடத்தில் வேத இலக்கியங்களைக் கொண்டு வந்து உட்கார வைத்தார்கள். சங்க இலக்கிய ஓலைச் சுவடிகள் ஆண்டுதோறும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

பல்லவர் ஆட்சியில் வடமொழி ஆதிக்கமே மேலோங்கியது. மகேந்திரவர்மப் பல்லவ மன்னர், ‘மத்தவிலாசப் பிரகசனம்' என்ற தலைப்பில் வடமொழியில் தான் நாடக நூலை எழுதினார். விஜயநகரப் பேரரசு காலத்தில் தெலுங்கு கோலோச்சியது. இசைத்துறையில்தெலுங்கு முழுமையாக நுழைந்த காலம் இது. இன்று வரை தமிழ்நாட்டு இசை மேடைகளை ஆட்சி செய்கிறது. மராத்திய மன்னர்கள் ஆளுகையில் அந்த மொழியும் உள்ளே வந்து சில பகுதிகளில் பரவி- யது. மொகலாயர்கள், நவாப்புகள் ஆட்சியில் நிர்வாகத் துறையில் பாரசீக, அரபியச் சொற்கள் நுழைந்தன. ஜில்லா, தாலுக்கா, ஜாமீன், வாய்தா, வக்காலத்து ஆகியவை அப்போது நுழைந்தவைதான். அடுத்து வந்த பிரிட்டிஷ் ஆட்சி- யானது ஆங்கிலத்தை முழுமையாகக் கொண்டு வந்து புகுத்தியது.

இவர்கள் யாருடைய ஆட்சியாக இருந்தாலும் ‘சமஸ்கிருத' ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்ட ஆட்சியாக நடத்தினார்கள். ‘உள்ளூர் விவகாரங்களில்தலையிடுவது இல்லை' என்ற கொள்கையானது சமஸ்கிருத - - வேத மரபுக்குவசதியாகப் போனது. மாற்று மொழியினர் - - மாற்று மதத்தவர் மாற்றுப் பண்பாட்டவர் படையெடுப்பானது தொடர்ந்து நடந்து வந்துள்ளது. அதனால்தான் தமிழ் புறக்கணிக்கப்பட்டது.

சிந்துச் சமவெளி நாகரிக காலத்தில் ( கி.மு.3000 - -1500) இந்தியா முழுவதும் பரவியிருந்தது தமிழ். கி.மு. 1580 ஆம் ஆண்டில் இந்தோ - - ஆரிய மொழி பேசுவோர் இந்திய நாட்டுக்குள் நுழைந்த பின்னால் தமிழின் பரப்பானது தெற்குப் பகுதியில் மிகமிகச் சுருங்கியதை உணர வேண்டும். வடபகுதியில் இருந்தமொழிகள் அனைத்தையும் இந்தோ --ஆரிய மொழி உள்வாங்கிவிட்டது. அதனால்உள்வாங்க முடியாதது தமிழ் மட்டும் தான். ஏனென்றால் சமஸ்கிருத மரபு வேறு. தமிழ் மரபு வேறு. சமஸ்கிருதம் இல்லாமல் தனித்தியங்கும் தன்மை தமிழுக்கு மட்டுமே உண்டு. இதனை முதலில் மெய்ப்பித்து எழுதியவர் கால்டுவெல். அதனால்தான் கால்டுவெல் மீது இனப்பகையோடு இழிசொற்களைப் பாய்ச்சு கிறார்கள்.

‘சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்த இந்துஸ்தானியைக் கற்றுக் கொள்ளுங்கள்' என்றார் காந்தி. ‘இந்தி கற்றுக் கொடுத்தால் 15 ஆண்டுகளில் இந்தியா, இந்திநாடாக மாறிவிடும்' என்று எடுத்துக் கொடுத்தார் சத்தியமூர்த்தி. ‘இந்தியைக் கற்றுக்கொண்டால் சமஸ்கிருதம் படிப்பது எளிது' என்று சட்டமன்றத்தில் சொன்னார் அன்றைய முதலமைச்சர் இராஜாஜி. 'இந்தி வேலைக்காரியாக இருக்கட்டும்' என்றார் இராஜாஜி. அதனால்தான் பெரியார் இந்த மொழித் திணிப்பை எதிர்த்தார். ‘இந்தியால் தமிழ் அழியாது, தமிழ்ப் பண்பாடு அழிந்து போகும்' என்றார் பெரியார்."வயிற்றுப் பிழைப்புக்காக தென்னாட்டில் புகுந்த ஆரியர்கள் மதத்தின் பேரால், கடவுள் பேரால் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி விட்டது போல இன்று வேலைக்காரியாக வரும் ஹிந்தி, நாளை தமிழ் நாட்டரசி ஆவது நிச்சயம்”என்று தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் பெரியார்.

Also Read: ”ஒன்றிய அரசின் ஆணவத்துக்கு போர்க்குணத்துடன் பதிலடி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி!