murasoli thalayangam

இந்தியாவை ஒற்றைச் சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி - 'ஒரே நாடு - ஒரே தேர்தல்’ முறை : முரசொலி கண்டனம்!

ஒரே நாடு - ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் தந்திருப்பது, இந்தியாவை ஒற்றைச் சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சிகளின் வடிவம் ஆகும்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கொடுங்கோன்மைக்கு இது வழிவகுக்கும் என்றும், நடைமுறைக்கு ஒவ்வாதது என்றும், மக்களாட்சிக்கு எதிரானது என்றும், மாநிலங்களின் குரலை அழித்துவிடும் என்றும், கூட்டாட்சியை சிதைத்துவிடும் என்றும், ஆட்சி நிர்வாகத்துக்கு தடையை ஏற்படுத்தும் என்றும் கூறியிருக்கிறார். இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று அவர் சொல்லி இருப்பதுதான் முழு உண்மையாகும்.

மக்களவைத் தேர்தல் - மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று நினைக்கிறது பா.ஜ.க.. அப்படி நடத்தினால், மக்களவை தேர்தல் மனோபாவத்தில் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நப்பாசைப்படுகிறது பா.ஜ.க.. இரண்டு வெவ்வேறு மனநிலைகளில் மக்கள் வாக்களிப்பதால் தான் மாநில அரசுகளைக் கைப்பற்ற முடியவில்லை என்று நினைக்கிறது பா.ஜ.க.. அதற்காகக் கொண்டு வரப்போகும் சட்டம்தான் ஒரே நாடு - ஒரே தேர்தல் சட்டமாகும்.

இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 129 ஆவது திருத்தத்தைக் கொண்டு வரப் போகிறார்கள். இந்தச் சட்டத்துக்கு கடந்த 12 ஆம் தேதி அன்று ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்ற முடிவை எடுத்து அதற்கு ஒப்புதல் வழங்குவதற்காக ஒரு கண்துடைப்பு குழுவை பா.ஜ.க. அரசு அமைத்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதன் தலைவராக இருந்தார். இவர்கள் சொன்னதை அப்படியே அவர் எழுதி வழங்கினார்.

மக்களவைக்கும், மாநில அரசுகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று இக்குழு சொன்னது. தொங்கு மக்களவை வந்தாலோ, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றாலோ மீதமுள்ள மக்களவையின் பதவிக் காலத்துக்கு புதிய தேர்தலை நடத்தலாம் என்றும் இக்குழு சொல்லி இருக்கிறது. அப்போது மட்டும் தனியாகத் தேர்தலை எதற்காக நடத்த வேண்டும்? அனைத்து மாநில அரசுகளையும் கலைத்து விட்டுத் தேர்தல் நடத்த வேண்டியது தானே?

ஒரே நேரத்தில் மக்களவை - மாநில அரசுகளுக்கு தேர்தல் வைத்தால் பல மாநில அரசுகளை முன்கூட்டியே கலைக்க வேண்டி வரும். சில மாநில அரசுகளை கூடுதல் காலம் ஆள அனுமதிக்க வேண்டி வரும். இதுவே அரசியலமைப்புச் சட்டத்தால் மக்களுக்கு வழங்கப்பட்ட ஜனநாயக உரிமையை தங்களது வசதிக்காக வளைக்கும் காரியம் ஆகும். அதனையும் இந்தச் சட்டம் செய்கிறது.

பா.ஜ.க.வில் கவிழ்ப்பு - உடைப்பு - இழுப்பு அரசியலால் பல மாநிலங்களில் குழப்பம் ஏற்பட்டு ஆட்சிகள் மாறுகிறது. அப்போதெல்லாம் மக்களவையைக் கலைத்து பதவி விலக பிரதமராக இருப்பவர் தயாராக இருக்கிறாரா? இருப்பாரா? ஒரே வீட்டில் இருக்கும் அண்ணன் - அக்கா - தம்பி - தங்கை நால்வருக்கும் ஒரே நேரத்தில் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் கேலிக்கூத்து அல்லவா இது?

இப்படி ஒரு விநோதமான - ‘செருப்புக்கு ஏற்ப காலைச் செதுக்கிக் கொள்ளும்’ பரிந்துரையை அக்குழு சொன்னது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை பா.ஜ.க. அரசு கடந்த செப்டம்பர் 18 ஆம் நாள் ஏற்றுக் கொண்டது. இதற்கான சட்டத்திருத்த மசோதா தயார் ஆனது. அந்த மசோதாவை ஒன்றிய அமைச்சரவை ஏற்றுக் கொண்டு விட்டது. மக்களவையில் வைக்கப் போகிறார்கள்.

மக்களவை - மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை ஒரே நேரத்தில் நிறைவு செய்வது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 82 ஏ -இல் புதிதாக துணைப்பிரிவு 2 சேர்க்கப்படுகிறது. மக்களவை, மாநில சட்டப் பேரவைகளைக் கலைப்பது தொடர்பாக சட்டப்பிரிவு 83 (2) வில் புதிதாக 3,4 ஆகிய துணைப் பிரிவுகளைச் சேர்க்கப் போகிறார்கள். ஒரே நேரத்தில் இரு தேர்தல்களையும் நடத்துவது தொடர்பாக சட்டப்பிரிவு 327 இல் திருத்தம் கொண்டு வரப் போகிறார்கள். யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தனியாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கையில், மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் முடிந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்த வேண்டும் என்று இருக்கிறது. இதனை ஏற்று சட்டம் செய்வதாக இருந்தால் 50 விழுக்காடு மாநில அரசுகளின் ஒப்புதல் தேவை. அது கிடைக்காது என்பதால் அதனைத் தள்ளி வைத்துவிட்டார்கள்.

இம்மசோதாக்கள் நிறைவேற மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.களின் ஆதரவு தேவை. அது பா.ஜ.க.வுக்கு இல்லை. அதாவது 361 எம்.பி.களின் ஆதரவு தேவை. பா.ஜ.க. கூட்டணிக்கு 293 எம்.பிக்களின் ஆதரவே இருக்கிறது. ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுக்கு 235 எம்.பிக்கள் இருக்கிறார்கள். மாநிலங்களவையில் 243 எம்.பி.களில் 122 எம்.பி.கள் ஆதரவுதான் பா.ஜ.க. கூட்டணிக்கு இருக்கிறது.

முன்னாள் தேர்தல் அதிகாரி குரேஷி சொன்னதை நினைவூட்ட விரும்புகிறோம். “ஒரே நாடு - ஒரே தேர்தல் என்று இப்போது சொல்பவர்கள் ‘ஒரே நாடு - ஒரே கட்சி ஏன் கூடாது?’ என்று நாளை கேட்கலாம். பிறகு, ‘ஒரே நாடு - ஒரே தலைவர் ஏன் கூடாது?’ என்றும் சொல்லலாம். அவ்வாறு கிளம்பினால் அதற்கு முடிவே இல்லை. பா.ஜ.க.வின் தேசியவாதம் எங்கே போய் முடியும்?” என்று கேட்டார் குரேஷி.

ஒற்றைத் தனி மனிதனின் கையில் நாட்டைக் கொண்டு போய்ச் சேர்க்கும். இந்த ஆபத்து ‘பா.ஜ.க.வையும் சேர்த்துத் தான்’ விழுங்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!

Also Read: “ஜனநாயக குரலை ஒடுக்கும் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ முறை” : கனிமொழி என்.வி.என்.சோமு!