murasoli thalayangam

சமூக ஊடங்களுக்கு கெடு விதிக்கும் மோடி அரசு, ராம்தேவ் - H.ராஜா மீது நடவடிக்கை எடுக்குமா? - முரசொலி கேள்வி!

சமூக ஊடகங்கள் என்பவை இந்த நூற்றாண்டு மக்களுக்குக் கிடைத்த மாபெரும் அரிய கொடை என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய தலைமுறைக்குக் கிடைக்காதது. அத்தகைய சமூக ஊடகத்தை இந்தச் சமூகம் எத்தகைய முறையில் பயன்படுத்திக் கொள்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பயன்பாடு இருக்கும்.

அண்ணல் அம்பேத்கர் சொன்னார்: ‘சட்டத்தில் நல்ல சட்டம், கெட்ட சட்டம் என்று இல்லை. எல்லாச் சட்டங்களும் அதனை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தது' என்று சொன்னார். அந்த முறைப்படி பார்த்தால் சமூக ஊடகங்களின் பயன்பாட்டில், பயன்படுத்தும் முறையில் இரண்டு பக்கமும் இருக்கிறது. சில தவறுகள் நடக்கிறது என்பதற்காக சமூக ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் காரியத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு பார்த்துவிடக்கூடாது.

வாட்ஸ்அப், பேஸ்புக், போன்ற சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்ற தொனியில் அதன் பயன்பாட்டையே முடக்கும் காரியமாக அது அமைந்து விடக்கூடாது. இது போன்ற சமூக ஊடகங்களில் பா.ஜ.க ஆட்சிக்கு எதிரான கருத்துக்கள் அதிகமாக வருவதுதான் பா.ஜ.க அரசின் பயத்துக்குக் காரணம் ஆகும். நாளிதழ்கள், காட்சி ஊடகங்களை - அதன் நிறுவனங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களது கட்டளைகளின் மூலமாகவும் எச்சரிக்கைகள் மூலமாகவும் பா.ஜ.க கடந்த பல ஆண்டுகளாகவே வழிநடத்தி வருகிறது.

பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதேபோன்ற பாணியை சமூக ஊடகங்களில் கடைப்பிடிக்க இயலவில்லை. ஏனென்றால் சமூக ஊடகங்கள் என்பவை நிறுவனங்களின் கையில் இல்லை, மக்களின் கையில் இருக்கிறது. தனி மனிதர்களின் எண்ணமே, குறிப்பிட்ட சமூகத்தின் எண்ணமாக மாறக்கூடிய சூழ்நிலையை சமூக ஊடகங்கள் உருவாக்கி விட்டது. இதைத்தான் ஆபத்தானதாக பா.ஜ.க அரசு பார்க்கிறது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசையோ, பிரதமர் நரேந்திர மோடியையோ, பா.ஜ.க ஆளும் அரசுகளையோ விமர்சிப்பதை, 'இந்திய இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால்' போல மடைமாற்றம் செய்து திசை திருப்பப் பார்க்கிறார்கள். பா.ஜ.க அரசு மீது வைக்கும் விமர்சனம் என்பது, இந்தியாவுக்கு எதிரான விமர்சனம் ஆகாது. இந்திய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் செய்திகள் எங்கிருந்து பகிரப்பட்டன என வாட்ஸ்அப்பிடம் ஆதாரம் கேட்கிறது ஒன்றிய அரசு.

இதன் மூலமாக அரசியல் ரீதியான விமர்சனங்களைக் கூட தேச விரோதமான விமர்சனமாகக்காட்ட நினைக்கிறார்கள். இத்தகைய பா.ஜ.க.வுக்கு இந்த நாட்டில் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளைத் தடுக்கும் அக்கறை இருக்கிறதா என்றால் இல்லை.

சமீபத்திய ஒரே ஒரு உதாரணம், பாபா ராம்தேவ். “கொரோனா தடுப்பூசியை இரண்டு தவணையாகச் செலுத்திக் கொண்ட பத்தாயிரம் மருத்துவர்கள் இதுவரை இறந்து போயிருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அலோபதி மருந்துகளை எடுத்துக் கொண்ட லட்சக்கணக்கான மக்கள் இதுவரை இறந்து போயிருக்கிறார்கள்” என்று ஒரு காணொலிக் காட்சியை பதஞ்சலி ஆயுர்வேதப் பொருள்கள் உற்பத்தி நிறுவன உரிமையாளர் ராம்தேவ் வெளியிட்டுள்ளார். இதை விட இந்த நாட்டுக்கு ‘தேச விரோத பொய்ச்செய்தி' இருக்க முடியுமா? ஒன்றிய அரசு அவர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?

முதல் அலையில் இந்தியா முழுமைக்கும் 753 மருத்துவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். அவர்கள் யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அப்போது தடுப்பூசியே வரவில்லை. இரண்டாவது அலையில் இதுவரை 513 மருத்துவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். இவர்களிலும் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்று இந்திய மருத்துவ சங்கம் சொல்லி இருக்கிறது. அப்படி இருக்கும்போது தடுப்பூசி போட்டுக் கொண்ட பத்தாயிரம் மருத்துவர்கள் இறந்து போனார்கள் என்று ராம்தேவ் எப்படி காணொலிக் காட்சி எடுத்து பரப்புகிறார்? அவரை பா.ஜ.க அரசு எப்படி அனுமதிக்கிறது?

இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. “கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 0.06 சதவிகிதத்தினருக்கு மட்டுமே லேசான பாதிப்பு ஏற்படுகிறது. இவர்களில் ஒருசிலர் மட்டுமே கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். அந்த வகையில் நாம் செலுத்தியிருக்கும் தடுப்பூசி கடுமையான பாதிப்பிலிருந்து மக்களைக்காக்கிறது என்பது நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ராம்தேவ் அளித்துள்ள பேட்டி வேதனை தருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், தேசிய செயல் திட்டக்குழு ஆகியவை மூலமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்யும் வழிகாட்டுதல்படியே சிகிச்சைகள் தரப்பட்டு வருகிறது. தங்கள் நிறுவனத்தின் பொருள்களை விளம்பரப்படுத்துவதற்காக கொரோனா பாதிப்புக்கான இந்திய அரசின் சிகிச்சை நடைமுறைக்கு சவால் விடும் வகையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சிகள், தெளிவான தேசத்துரோகக் குற்றம் என்பது எங்களுடைய கருத்து. இது போன்ற முயற்சிகளில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக தேசத்துரோகக் குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” - என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Modi - Amit shah

ராம்தேவ், 15 நாட்களுக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லாவிட்டால் 1000 கோடி இழப்பீடு கேட்டு அவர் மீது வழக்குத் தொடரப்படும் என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. ராம்தேவ்க்கு வழக்கறிஞர் தாக்கீது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு மவுனமாகவே இருக்கிறது. சாமான்ய மக்களின் கருத்துச் சுதந்திரத்தை மிரட்டல்களின் மூலமாக பறிக்க நினைப்பவர்கள், பெரிய மனிதர்களின் மாபெரும் அவதூறுகளை மறைக்க நினைப்பதன் பின்னணிதான் மாபெரும் சவால்.

வாட்ஸ் அப் வழியாகப் பகிரப்படும் தகவலை முதலில் பதிவிட்டவரின் விவரத்தை அளிக்க வேண்டும் என்று கேட்பதற்கு முன்னதாக வெளிப்படையாகவே ராம்தேவ் முதல் இங்குள்ள எச்.ராஜா வரையிலான மனிதர்களின் அவதூறுகளின் மீது பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பதே இன்று நம்முன் உள்ள கேள்வி. மற்றபடி, நம் கையில் உள்ள சமூக ஊடகத்தை முறையாக, சரியாக, நெறிமுறைகளோடு மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!

Also Read: “மாட்டுக்கறிக்கு தடை.. கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி” : காஷ்மீரை தொடர்ந்து லட்சத்தீவை சூறையாடும் மோடி அரசு!