M K Stalin
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
உலக அளவில் பரவி இருக்கும் தமிழ்ச் சமூகத்தினர் தங்களது நெஞ்சில் ஏந்திருக்கும் தமிழ்ச் சுடரை யாராலும், எவராலும் அணைத்துவிடவோ, அணைக்க நினைத்துவிடவோ முடியாது என்பதை நூற்றாண்டுகள் கடந்து உரக்கச் சொல்லி வருகிற இனமாக தமிழ் இனம் வீரிட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழ் இனம் என்பது வெறும் மொழி உரிமை கோரும் இனமாக மட்டும் இல்லாமல் சமூக ஒற்றுமை, பொதுவுடைமை, மதச்சார்பின்மை, சுயமரியாதை உள்ளிட்ட கருத்தியல்களை ஆழமாக உணர்ந்து, தன்னுரிமையை என்றும் கைவிடாத இனமாகவும் செயல்பட்டு வருகிறது.
அப்படியான நிலையில், இந்திய ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படும் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு என்றும் வழிவிடாமல், தமிழ் மொழியைக் காத்து வருகிற நடவடிக்கையை தமிழ்ச் சமூகம் என்றும் தளராது தொடர்ந்து வருகிறது.
அப்படியான தொடர்ச்சியாகதான், மே 17 இயக்கத்தின் சார்பில் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டங்கள், சென்னையில் உள்ள தொடர்வண்டி நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த போராட்டங்கள் தமிழ்த் ‘தீ’ பரவவும், இந்தித் திணிப்பை ஒடுக்கவும் உந்துதலாக இருப்பது தவிர்க்க முடியாத உண்மை என்றாலும், தமிழர்கள் என்றும் தங்களது இன்னுயிருக்கு மதிப்பளித்து, தமிழ்த் ’தீ’-யை பரவ செய்ய வேண்டும். தமிழ்த் தீ பரவுவதை தமிழர்கள் கண்டு பெருமைக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை மீண்டும் அழுத்தமாக எடுத்துரைத்திருக்கிறது.
காரணம், மே 17 இயக்கத்தின் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின் போது, அந்த இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் என்பவர், தமது எழுச்சிமிகு உணர்ச்சியால் தன்னுயிர் நலன் பாராது இரயிலின் முன்னே ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என முழக்கமிட்டவாறே தண்டவாளத்தில் இறங்கி தன்னையே கொடுக்க முனைந்துவிட்டார்.
இதனையடுத்து அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (மார்ச் 18) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பலரும் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமுக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,
“இனி ஒரு உயிரும் போக வேண்டாம்!
இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது.
மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!
இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் - தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன்.”
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!