M K Stalin

“எங்களை விமர்சனம் செய்தவர்களுக்கான பதில்தான் இது!” : ‘செயலாக்க’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
இன்று (12.2.2026) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் கலந்துகொண்டு (Conversion Conclave) உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது,

திராவிட மாடல் என்றால், வளர்ச்சிக்கான மாடல்! திராவிட மாடல் என்றால் Result கொடுக்கக்கூடிய மாடல்! திராவிட மாடல் என்றால், மக்கள் நலனுக்காக இருக்கக்கூடிய மாடல்! இதை எல்லாம் உலகுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய மாநாடுதான், இந்த செயலாக்க மாநாடு! 

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்து சொல்ல வேண்டும் என்று சொன்னால், பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருக்கு எங்களுடைய செயலின் மூலம் பதில் சொல்லும் மாநாடு தான் இந்த செயலாக்க மாநாடு!

தொழில்துறை அமைச்சர் அவர்கள் இங்கே சொன்ன ஒவ்வொரு Data-வும், எங்களை விமர்சனம் செய்தவர்களுக்கான பதில் அதுதான்! இங்கே அவர் சொன்ன ஒவ்வொரு நம்பரும், எங்கள் Team-க்கான ஐந்து வருட கடுமையான உழைப்பிற்கான நம்பர். தொழில்துறையில் நாங்கள் செய்திருக்கக்கூடிய ரெக்கார்டை அடித்துச் சொல்கிறேன் அடுத்து, நாங்கள் வந்துதான் பீட் செய்யப் போகிறோம். இது உறுதி!

இன்றைக்கு இந்த மாநாட்டில் மட்டும் 52 கம்பெனிகளுடைய திறப்பு விழா! 71 கம்பெனிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா! 2 புதிய கம்பெனிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம்! என சாதனை சொல்கின்ற மாநாடாக இது நடைபெறுகிறது.

கடந்த 2021 முதல் நாங்கள் செய்த பணிகளை எல்லாம் மேடை போட்டு சொல்லியிருக்கிறோம். இங்கே வந்திருக்கக்கூடிய ஊடக நண்பர்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்ள அன்போடு விரும்புவது, இவைகளை எல்லாம் முழுமையாக நீங்கள் மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.  ஏனென்றால், இந்தியாவிலேயே இது போன்ற ஒரு மாநாடு எங்கும் நடந்ததில்லை! 

பொதுவாக எல்லா மாநிலங்களிலும், எல்லா அரசுகளும், முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, எங்கள் மாநிலத்தில் இவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்று அழைப்பு விடுப்பார்கள்! ஆனால், முதன்முறையாக, எங்கள் மாநிலத்துடன் நீங்கள் அமைக்கக்கூடிய Partnership என்பது, அதையும் கடந்த Relationship-ஆக, Friendship-ஆக உருமாறி, இப்படி மக்களுக்கு நலன் கொடுக்கிறது என்று எடுத்துக்காட்டுவது போல இந்த செயலாக்க மாநாடு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! 

ஒரு தொழில் நிறுவனமோ, தொழிற்சாலையோ, தங்களுக்கான மாநிலத்தை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என்றால், அந்த மாநிலம் தங்களுக்கான வாய்ப்புகளை பெரிய அளவில் உருவாக்கித் தருமா? சொன்ன நேரத்தில், தங்களால் Production-யை தொடங்க முடியுமா? என்று பார்த்துதான், ஒரு மாநிலத்திற்கு வருவார்கள்! அப்படி, தொழில் நிறுவனங்கள் - தொழிற்சாலைகள் - தொழில் முனைவோர் – தொழிலாளர்கள் என்று எல்லோருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய மாநிலமாக, நம்முடைய தமிழ்நாடு இருக்கிறது!

எதனால், இந்த வெற்றி சாத்தியமாகிறது என்று கேட்டீர்கள் என்றால், எங்களைப் பொறுத்தவரைக்கும், முதலீட்டாளர் மாநாடு நடத்திவிட்டோம்; புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டோம்; நியூஸில் தலைப்புச் செய்தியாக வந்துவிட்டது என்று திருப்தி அடைந்திட மாட்டோம்!

போட்ட ஒப்பந்தம் - நிறுவனமாக திறப்பு விழா கண்டு, நம்முடைய இளைஞர்கள் கைக்கு, Offer Letter வந்து சேரும் வரைக்கும் பார்த்துப் பார்த்து, எல்லாவற்றையும் நாங்கள் உறுதி செய்கிறோம்! இங்கே சமூகநீதியும் நிலை பெறவேண்டும்! தொழில் வளர்ச்சியும் உறுதி செய்யப்பட வேண்டும்! அப்போதுதான், ‘எல்லார்க்கும் எல்லாம்’ - ‘அனைத்து மாவட்ட வளர்ச்சி’ என்ற இலக்கை அடைய முடியும் என்பதில் நாங்கள் மிக கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்! 

இதை நான் பெருமையோடு சொல்கிறேன்… “தமிழ்நாடுதான், முதலீட்டாளர்களின் முதல் முகவரி” என்று அனைத்து புள்ளிவிவரங்களும் சொல்ல ஆரம்பித்துவிட்டது! 

இன்றைக்கு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் சராசரியைவிட அதிகம்! தமிழ்நாட்டின் வளர்ச்சி 11.19 சதவிகிதம்! இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஆண்டு, இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி, 4.5 சதவிகிதம்! அதேசமயம், தமிழ்நாட்டின் வளர்ச்சி அதைவிட மூன்று மடங்கு அதிகமாக, 14.7 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது!

இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில், தமிழ்நாட்டின் share மட்டும் 41 விழுக்காடு! இதை மேலும் அதிகரிக்கக்கூடிய வகையில், இன்னும் பல செயல் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்! மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தில், ஒன்றிய அரசு தருகின்ற அனுமதிகளில் கிட்டத்தட்ட
60 சதவிகிதம் தமிழ்நாட்டின் முதலீடுகளுக்கானது! 

எங்களுடைய Working Style எப்படி என்று கேட்டீர்கள் என்றால், ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால், அதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே, அதற்காக ஒரு ‘Dash Board’ உருவாக்கிடுவோம்! அதை நானே Monitor செய்வேன். அதில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா? எந்த மாவட்டத்தில் திட்டம் வருகிறது?

எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும்? தொடங்கப் போகின்ற திட்டத்திற்கு எந்தத் துறைகளில் இருந்து அனுமதி தேவை? எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும்? அந்த அனுமதி எல்லாம் நாங்கள் சொன்ன தேதியில் கிடைக்கிறதா? என்று Follow செய்வோம். அது முடிந்ததும், அடிக்கல் நாட்டு விழா எப்போது? கட்டுமானப் பணிகளை எப்போது தொடங்கப் போகிறோம்? இதனால், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்? குறிப்பாக, பெண்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அதில் கிடைக்கும்? எப்போது Production-யை Start செய்வார்கள்? இப்படி எல்லாவற்றையும் நாங்கள் Follow செய்வோம்! அதைத் திறந்து வைக்கின்ற வரை, எங்கள் வேலை முடியாது. எல்லாம் முடிந்தால்தான் Dash Board-ல் அதை நாங்கள் Close செய்வோம்! 

ஒவ்வொரு முறையும் தொழில்துறை அமைச்சரை நான் பார்க்கும்போதும், “போட்ட MoU-ல் எத்தனை செயல்பாட்டிற்கு வந்தது?” என்று இந்த Dash Board பற்றிதான் அதிகமாக கேட்பேன். இதில், எதிலாவது சிறிதளவு தாமதானாலும், சம்பந்தப்பட்ட துறைகளுடன் அதிகாரிகளை அழைத்து, தலைமைச் செயலாளர் தலைமையில், மீட்டிங் வைக்கச் சொல்லி, அங்கேயே “On Table” ‘Clear’ செய்ய சொல்லுவேன். இப்படி, Systematic-ஆக செயல்படுவதன் Result-தான், கோத்தாரி - கோத்ரெஜ் - வின்ஃபாஸ்ட் - Tata J.L.R. போன்ற டாப் நிறுவனங்களின் உற்பத்தி ஆலையை குறித்த காலத்தில் திறந்து வைத்தது! 

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பெரம்பலூரில் இருக்கின்ற ஃபீனிக்ஸ்-கோத்தாரி காலணித் திட்டம் அடிக்கல் நாட்டியதற்கும், திறக்கப்பட்டதற்குமான இடைவெளி என்னவென்று கேட்டால், சரியாக 12 மாதங்கள்தான்! வின்ஃபாஸ்ட் கூட, ஜனவரி 2024-ல் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டோம். அடுத்த மாதமே அடிக்கல் நாட்டி, ஆகஸ்ட் 2025-ல், அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டோம். 

அதேபோல, கடந்த திங்கட்கிழமை திறந்து வைத்து, அதையெல்லாம் நீங்கள் தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் பார்த்திருப்பீர்கள் - புகழ்பெற்ற Tata J.L.R. நிறுவனத்தின் பணிகளை செப்டம்பர் 2024-ல்தான் தொடங்கினோம்! இந்த வாரம் First காரை வெளியிட்டோம்! இதை எல்லாம் பார்ப்பவர்கள், ‘எப்படி தமிழ்நாட்டில் இதை எல்லாம் சாதிக்க முடிகிறது’ என்று நினைப்பார்கள். எங்களைப் பொறுத்தவரைக்கும், எல்லாவற்றுக்கும், “Single Window”, Fast Clearance! இதுதான் காரணம்! 

ஒரு நிறுவனம் தொழில் தொடங்க தேவையான எல்லாமே தமிழ்நாட்டில் இருக்கிறது! அதிகமான விமான நிலையங்கள், நீண்ட கடற்கரை மற்றும் துறைமுகங்கள் – சிறப்பான சாலைகள் - சீரான மின்சாரம் மற்றும் நீர் விநோயகம் - நான் முதல்வன் போன்ற திட்டங்களால், திறன் பயிற்சி பெற்ற இளைஞர்கள், இயற்கை வளமும், தரமான மனித வளமும் இங்கே இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில், தமிழ்நாடுதான் இன்றைக்கு முன்னோடியாக இருக்கிறது!

அனைத்து மாவட்டங்களுக்கும் வளர்ச்சி போய் சேரவேண்டும் என்று, கடந்த ஐந்தாண்டுகளில், சிப்காட் நிறுவனம் மூலமாக 55 ஆயிரத்து 278 ஏக்கர் நிலத்தை தெரிவு செய்து, தமிழ்நாட்டில் இருக்கின்ற 38 மாவட்டங்களில், 35 மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைக்க பணிகள் நடந்து கொண்டிருக்கிறது! கன்னியாகுமரி - மயிலாடுதுறை - நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில், சுற்றுலா முதலீட்டு பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்! இரண்டாம் நிலை மாநகரங்களில் கூட, மினி டைடல் பார்க் அமைத்துக் கொண்டு வருகிறோம். 

2021-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாட்டில், இரண்டே இரண்டு டைடல் பார்க் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில், 7 டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்களை புதிதாக திறந்து வைத்திருக்கிறோம். மேலும், 14 டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கபட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு சிறப்பம்சம் என்பது, காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்யாமல், மாநில நலனை முன்னிறுத்தி, அரசியல் செய்வது. தொழில்துறை என்று மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும், கடந்த ஆட்சியில், போடப்பட்ட ஒப்பந்தங்களாக இருந்தாலும், மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை கிடப்பில் போடாமல், எந்த பாகுபாடும் பார்க்காமல், ஒத்துழைப்பு கொடுத்து நிறைவேற்றியிருக்கிறோம். 

இப்போது வளர்ந்து வருகின்ற புதிய துறைகளான செமிகண்டக்டர் – AI - Deep Tech போன்றவற்றிலும், தமிழ்நாடு தன்னுடைய தடத்தை வலிமையாக பதித்துக் கொண்டு வருகிறது. முக்கியமாக, முன்னணி நிறுவனங்களின் ஒன்றாக இருக்கக்கூடிய R & D மையங்களை அமைப்பது, சிப் வடிவமைப்பு, செமிகண்டக்டர் இயந்திர உற்பத்தியை மேம்படுத்துவது இது போன்ற முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துக் கொண்டு வருகிறோம்!

சூலூர் மற்றும் பல்லடம் பகுதிகளில், செமிகண்டக்டர் இயந்திர உற்பத்தி பூங்காக்களை உருவாக்கியிருக்கிறோம்! இதன் மூலமாக, தமிழ்நாடு உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக உயரக்கூடும்! எந்த செக்டார் எடுத்தாலும், தமிழ்நாடுதான் முன்னணி மாநிலம்! 

இங்கே இருக்கின்ற பல முதலீட்டாளர்களும் தமிழ்நாட்டில், தாங்கள் பெற்ற பாசிட்டிவ் அனுபவங்களை, மற்ற முதலீட்டாளர்களிடம்கூட நீங்கள் ஷேர் செய்ததால்தான், எங்களுடைய வெற்றி இன்றைக்கு சாத்தியமாகியிருக்கிறது. அதற்காக, இந்த நேரத்தில், அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்! 

மொத்தத்தில், உங்களுடைய வளர்ச்சிதான், எங்களுடைய மகிழ்ச்சி! குறிப்பாக, இன்றைய மாநாட்டில், தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் போட்ட ‘கேனெஸ் டெக்னாலஜீஸ்’ நிறுவனத்தின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம்! இங்கிலாந்து பயணத்தில், ‘அஸ்ட்ரா செனகா’ நிறுவனத்தின் ‘உலகளாவிய திறன் மைய’ விரிவாக்கத்திற்காக ஒப்பந்தமிட்டோம். அது துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது! 

ஜெர்மனி நாட்டுப் பயணத்தில், ‘நார் ப்ரெம்சே’ நிறுவனத்திடம் போட்ட ஒப்பந்தத்திற்கான உற்பத்தி ஆலைக்கு - சிப்காட் மாம்பாக்கத்தில் அடிக்கல் நாட்டியிருக்கிறோம்! 

டாபர் நிறுவனத்துடன் முதல் தென்னிந்திய ஆலைக்கு திண்டிவனத்தில் அடிக்கல் நாட்டியிருக்கிறோம்! 

2024 உலக முதலீட்டாளர் மாநாட்டில் போட்ட ஒப்பந்தத்தின்படி, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில், ‘டாடா சால்ட்’ நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம்! 

கோவை முதலீட்டாளர் மாநாட்டில், ஜான்சன் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் போட்ட ஒப்பந்தத்திற்கு, ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பனப்பாக்கத்தில் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். 

மின்னணு துறையில், முன்னணி நிறுவனமாக இருக்கக்கூடிய V.V.D.N. நிறுவனம், பொள்ளாச்சியில், சுற்று வட்டாரப் பகுதி பெண்களுக்கு பயிற்சியளித்து, பணி வழங்கவுள்ள நிறுவனத்தை நிறுவியிருக்கிறார்கள்! 

இப்படி, தமிழ்நாட்டில், தங்களுடைய பயணத்தை தொடங்கவுள்ள, தொடரவுள்ள அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளும்! நன்றிகளும்! 

இந்த நேரத்தில், நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள் எல்லாம்,  சாதனைகளைச் செய்யும் எங்கள் திராவிட மாடலுடன் சேர்ந்து, உங்களுடைய பயணத்தை தொடருங்கள்! புதுத் திட்டம் தொடங்க வேண்டும் என்றால், உங்களுக்கு ஐடியா வந்தாலே, அதை தமிழ்நாட்டில்தான் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து உங்களுக்கு சேரும்! உங்களுக்கு எப்படி Target இருக்கிறதோ, அது மாதிரி எங்களுக்கும், 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையவேண்டும் என்கின்ற Target இருக்கிறது! எனவே, அதிகமான முதலீட்டாளர்களை தமிழ்நாட்டை நோக்கி அழைத்துக் கொண்டு வாருங்கள்… உங்கள் Target-யையும், எங்கள் Target-யையும் அடைய, இணைந்தே பயணிப்போம்! வெல்வோம் ஒன்றாக! 

Also Read: “திராவிட மாடல் ஆட்சியில் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!